குர்து மலைகள்
பெண் கொரில்லாக்கள்
ஏந்தியிருக்கும் கொடியில்
புன்னகைக்கும் சூரியனின் ஒளி
அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க
ஜூடி மலையிலிருந்து
மிக நெருக்கமாகவே கேட்கிறது
சுதந்திரத்தை அறிவிக்கும்
குர்துச் சிறுவனின் குரல்
போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக
யூப்ரட் நதியிருகே
ஒலீவ மரம்போல்
காத்திருக்கும் பெண் ஒருத்தி
இனி அவன் கல்லறைக்கு
கண்ணீருடன் செல்லாள்
ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல
தலைமுறை தோறும்
விடுதலை கனவை சுமந்து
சுதந்திரத்தை வென்ற
உம் இருதயங்களில் பூத்திருக்கும்
பிரிட்டில்லா மலர்களின் வாசனையை
நான் நுகர்கிறேன்
குருதி ஊறிய
குர்து மலைகளே
உமது தேசம் போல்
எமது தேசமும் ஒர்நாள் விடியும்
எமது கைகளிலும் கொடி அசையும்
கோணமலையிலிருந்து உமக்குக் கேட்கும்
எமது சுதந்திரத்தை அறிவிக்கும்
ஈழச் சிறுவரின் குரல்
லினுஸ் மலர்களை அணைப்பதைப்போல
எமது கொடியினை ஏந்தி
எம் கனவை உம் விழிகளிலும்
எம் தாகத்தை உம் இருதயத்திலும்
சுமந்த மலைகளே
இறுக்கமாகப் பற்றுகிறோம்
எம் நிலத்தின் விடுதலையை
எதிர்பார்த்திருக்கும் உமது தோள்களை.
ஒரு போராளியின்
இறுதிப் பார்வைபோல
திடமானது நம் சுதந்திரம்
கொரில்லாக்களைப் போன்ற குர்து மலைகள்
உமக்குத் தோழமை
நீரோ எமக்குத் தோழமை
குர்து மலைகளைப் போலவே
புனிதமானது நமது விடுதலை.
●தீபச்செல்வன்.