சென்னை மாநகருக்கு, வெளிநாட்டு விமானங் கள் வந்து செல்வதற்கு வசதியாக 2-வது விமான நிலையம் அமைக்க காஞ்சீபுரம், திருவள்ளூரில் இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மும்பை, டெல்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய விமான நிலையம் ஆகும். இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் தினசரி 100-க்கும் மேற்பட்டவைகள் வந்து செல்கின்றன.
மேலும் மீனம்பாக்கம் விமான நிலையம் நாளுக்கு நாள் பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே சென்னைக்கு 2-வது விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன் அரசு திட்டமிட்டது.
தற்போது ஸ்ரீபெரும்புதூரில் ஏராளமான நிறுவனங்கள், கம்பெனிகள் தொடங்கப்பட்டுவிட்டது. இதனால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நிலத்தின் மதிப்பும் வெகுவாக உயர்ந்து விட்டது. மேலும் அங்கு விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்கள் கிடைக்கவில்லை.
எனவே காஞ்சீபுரம் அல்லது திருவள்ளூரில் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டத்தில் அலமாதி, கும்மிடிபூண்டி ஆகிய ஊர்களில் காலி இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்கள் இப்பகுதிகளில் போதுமான அளவு உள்ளது.
எனவே 2-வது விமான நிலையம் எங்கே அமைப்பது என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். புதிதாக அமைக்கப்படும் 2-வது விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும். மீனம்பாக்கத்தில் உள்நாட்டு விமான சேவை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மீனம்பாக்கத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ஒரே நேரத்தில் வந்து செல்வதால் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வருவதால் நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே புதிதாக 2-வது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தேர்வு செய்வதற்காக ஆய்வு பணிகள் தொடங்கி விட்டது. போதுமான நிலம் கிடைத்ததும் விமானம் நிலையம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்படும். மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கும். புதிய விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கான விமான சேவை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.