யாழ்ப்பாணத்தில் பிறந்தது கரவெட்டி எனிலும் வளர்ந்தது மல்லாவி மண்ணில் நிறைய ஆசைகளோடு பயணித்த இரத்தினம் கவிமகன். நான்காம் கட்டத்தில் இடம் பெற்ற போர் போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள், ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் கவிதை, பத்தி எழுத்து, பாடல்கள், சுவடுகள், திறனாய்வு, துறைகளிலும் தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் எழுதிவருகின்ற இவர் மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்டவர். சமகாலத்தின் மிகவலிமையுடைய குரலாக கருதப்படும் கவிமகனுடன் ஒருநேர்காணல்.
நிலவன் :- உங்களை பற்றி ?
கவிமகன் :- முன்னே தந்தை முதலெழுத்தன்றி எதுவுமிலான் பின்னே அதுவுமிலான் இதை விட கூறுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை அவ்வளவு சாதனைகளை நான் செய்ததில்லை. போரும் போரியல் சார்ந்த வாழ்வும் என் நினைவுகள். அவற்றோடே தினமும் வாழ்பவன். தமிழீழ தேசியத்தலைவனையும் மாவீரர்களையும் மனசார நேசிப்பவன். அவர்களின் தியாகங்களை அவர்களின் போரியல் வலுவை அடுத்த தலைமுறைக்கான பதிவுகளாக அல்லது வழிகாட்டிகளாக அவர்களிடம் விட்டுச் செல்ல வேண்டும். இதுவே என் கனவு. முள்ளிவாய்க்காலுடன் எம் வீரம் புதைக்கப்பட்டு விட்டது என்பதை அடுத்த தலைமுறைக்கான பதிவாக விட்டுச்செல்லாது எங்கள் மூத்தவர்கள் எத்தகைய வீரமுள்ளவர்கள் என்ற உறுதியை அவர்களுக்குள் விதைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவன்.
பெயர் கவிமகன்
தந்தை இரத்தினம்
தாய் இந்திரப்பிரபா
வாழ்வது ஜேர்மனி
நிலவன் :- உங்கள் ஊர் பற்றி சொல்லுங்கள் ?
கவிமகன் :- என் பிறப்பிடம் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி மண்ணில் ஒரு சிறு கிராமம். கரவெட்டி கிழக்கு. வாழ்வது சில நூறு குடும்பங்களே. எனிலும் 80 க்கு மேற்பட்ட மாவீரர்களை தமிழீழ மண்ணுக்காக விதையாக்கிய கிராமம். போரும் போரியல் நடவடிக்கையும் போர்க்குணமும் மிக்க ஒரு சிறு கிராமம்.
நிலவன் :- உங்கள் சிறு பராயம் பற்றி ?
கவிமகன் :- நான் பிறந்தது கரவெட்டி எனிலும் வளர்ந்தது மல்லாவி மண்ணில் நிறைய ஆசைகளோடு பயணித்த என் சிறுபராயம் இழப்புகளும் இடப்பெயர்வுகளுடனுமே கழிந்து போனது. கனவுகள் சிதைக்கப்பட்ட தலைமுறை ஒன்றின் ஒருவன் நான்
நிலவன் :- பாடசாலை காலம் பற்றி ?
கவிமகன் :- படித்த பாடசாலைகளை வரிசைப்படுத்த முடியவில்லை ஏனெனில் ஒவ்வொரு இடப்பெயர்வும் ஒவ்வொரு பள்ளியை எனக்கு தந்தது. ஆனாலும் அகரத்தை தொடங்கியது கரவெட்டி கிழக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலையைத் தொடர்ந்து நெல்லியடி மத்தியமகா வித்தியாலயம், மல்லாவியின் யோகபுரம் மகா வித்தியாலயம், மல்லாவி மத்தியகல்லூரி. இவற்றில் என்னை நானே படம் போட்டதும் வளர்ந்ததும் என் எழுத்துக்களை இனங்காட்டியதும் யோகபுரம் மகா வித்தியாலயமே. இங்கே என் ஆசான்களும் அதிபரும் எனக்கு நல் வழிகாட்டிகளாக இருந்ததை மறக்க முடியாது.
நிலவன் :- உங்கள் பல்துறை சார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள் இளமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?
கவிமகன் :- இளைமைக்காலம் என்பது அதிகமாக சண்டைகளும் இடப்பெயர்வுகளுடனும் தான் அதிகம் கழிந்தது. கல்வியில் நாட்டம் இருந்ததால் கலையிலும் ஆர்வம் அதிகமாகவிருந்தது. எனது தந்தையின் எழுத்துக்களை பார்த்து வளர்ந்ததால் எழுத்தில், தமிழில் பற்று அதிகம். அவரால் தான் இந்த துறைக்குள் வந்தேன். முழுவதும் என் தந்தையின் வழிகாட்டலே. பள்ளியில் எழுத்தாற்றலை வளர்க்க கூடிய மாதாந்த கையெழுத்து சஞ்சிகைக்கை ஒன்றை நடத்தினோம் அதில் என் எழுத்துக்களை பதிவு செய்ய அதிகமாக எழுத தொடங்கினேன். போரியல் நாவல்கள் புராதன இதிகாசங்கள் போன்றவற்றை விரும்பி வாசித்தலும் எழுத்துலகிற்கு என்னை உள்வாங்க ஒரு காரணம் ஆகும்.
நிலவன் :- உங்கள் தந்தை ஒரு எழுத்தாளர். அவர்பற்றி சற்று கூற முடியுமா ?
கவிமகன் :- இரத்தினம் அவரது பெயர். முருகு இரத்தினம் அல்லது முருகு பாரிமகன் என்ற பெயர்களில் எழுதுவார். 1970 ஆம் ஆண்டு காலத்தில் உழைப்பாளர்களின் தோழன் என்று கருதப்படும் டானியல் போன்றவர்களின் சாத்வீக கருத்துக்களை கவிதைகளாக கட்டுரைகளாக பதிவிடத் தொடங்கிய எனது தந்தை இறுதி நாட்கள் வரை தமிழையும் தமிழீழத்தையும் நேசித்தார். அவற்றை பதிவுகளாக்கினார். ஆனால் முள்ளிவாய்க்கால் மண்ணில் அத்தனையையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டேன் நான். அவற்றை மீள எடுக்க முடியவில்லை அவர் நல்ல கவிஞனாக ஈழ எழுத்துத்துறையில் இருந்தது மன நிறைவு.
நிலவன் :- எழுத்துத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள் எவை ?
கவிமகன் :- தந்தை ஊட்டிய தமிழமுதமும் தாயின் தமிழ்பற்றும், எம்மினிய போராளிகளின் சண்டை அனுபவங்களும் நான் வாசித்த சண்டை மற்றும் கிராமிய நாவல்கள் அத்துடன் இதிகாசங்கள் என்னை அப்படியான எழுத்துக்களோடு சங்கமிக்க வைத்தது.
நிலவன் :- உங்களுக்குள் எழுத்து மேல் ஈடுபாடு வந்தது பற்றி….
கவிமகன் :- ஆண்டு 9 படிக்கும் போது ஒரு கவிதை கிறுக்கினேன். அதை பார்த்த என் அதிபர் என்னை போட்டி ஒன்றுக்கு அனுப்பினார். அந்த போட்டியில் பங்குபற்றிய 20 ற்கும் மேற்பட்டவர்களுள் நான் 4 ஆவது இடத்துக்கு வந்தேன். அப்போது 1 ஆவது இடத்துக்கு வர வேண்டும் என்ற ஆசை எழுந்தது அதனால் அதில் ஈடுபாட்டுடன் இருந்தேன். தந்தை வழிகாட்டல் அதற்கு துணையிருந்தது
நிலவன் :- உங்கள் கவிதை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்.
கவிமகன் :- மேலே குறிப்பிட்டது போல போட்டியில் வெல்ல எழுதிய நான், போராட்ட கவிதைகளை எழுத தொடங்கினேன். அவை ஈழநாதம், புலிகளின்குரல் வானெலி ஆகியவற்றில் வெளிவந்தது.
நிலவன் :- வேரோடும் விழுது நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது?
கவிமகன் :- என் தந்தையின் ஆசை ஒன்றே அதற்கு ஏதுவானது. அவர் தனது தொகுப்பொன்றை வெளியிட ஆசை கொண்டிருந்தார். அது நிராசையாகி விட்டது. அதனால் அவரது நினைவு நாளில் அவர் கற்பித்த எனது ஆரம்ப பள்ளியில் என் ஆசிரியர்கள் முன்னிலையில் அவருக்காக வெளியிட வேண்டும் என்ற ஆசை என் புத்தகத்தை வெளியிட்டேன்.
நிலவன் :- நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களை அதிகம் கவர்ந்த கவிதை எது?
கவிமகன் :- எல்லாக்கவிதைகளும் என்னை கவர்ந்தவை தான் அதனால் என்னால் பிரித்து கூற முடியவில்லை. ஆனால் இது என் முதல் மேடையேறிய கவிதை.
இரத்தத்தில் பிறந்து
இரத்தத்தில் வளர்ந்து
இரத்தத்தில் மடியும்
இரத்தப்பூக்கள் நாங்கள்
இரத்தமே எங்கள் மூச்சானதால்
இரத்த சிகப்பே உயிரானதால்
இரத்த சிதறல்களாய்
இரத்தத்தோடு சிதறுகிறோம்
இரத்த உறவுகள் – ஈழ
இரத்தமாய் உயிர் வாழ – பகை
இரத்தம் குடிக்கும்
இரத்தங்களாய் மடிந்து போகிறோம் …
இவ்வாறு அந்த 3 நிமிட கவிதை தொடர்கிறது. இது கரும்புலிகள் நாளுக்காக எனது 14 ஆவது வயதில் நானாக எழுதி மேடையேறிய கவிதை. தந்தையின் எந்த திருத்தமுமின்றி.
நிலவன் :- உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?
கவிமகன் :- “பணம்” இது இன்றைய காலத்தில் பெரும் தடை
நிலவன் :- ஒரு எழுத்தாளன் அறிஞராகவும் அல்லது கல்வியாளரக இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதா ?
கவிமகன் :- நல்ல வாசிப்பாளனாக இருத்தல் வேண்டும்.
நிலவன் :- ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்?
கவிமகன் :- எழுத்துக்களை நிதானமாக கையாள வேண்டும். சொல்ல வரும் விடயத்தை சுருக்கமாக கருத்து செறிவாக கூற வேண்டும். வாசிப்பு பழக்கம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
நிலவன் :- உங்களுக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்..?
கவிமகன் :- எனக்கு பெரும்பாலும் சண்டை நாவல்கள் தான் பிடிக்கும் அது தமிழ் அல்லது ஆங்கில நாவல்களில் எது என்றாலும் பிடிக்கும். குறித்து கூற முடியவில்லை ஆனால் ஈழ எழுத்தாளர்களின் மொழியாள்கை என்னை கவர்ந்தது.
நிலவன் :- யாருடைய புத்தகங்களை அதிகம் வாசிப்பீர்கள்…?
கவிமகன் :- நல்ல புத்தகங்கள் யாருடையதாக இருந்தாலும்….
நிலவன் :- தமிழரின் கலை, கலாசார பண்பாடுகளைப் பாதுகாப்பதில்,இன்றைய நவீன, நாகரிக வளர்ச்சி எவ்வகையான ஆதிக்கத்தினைச் செய்கின்றது என நினைக்கின்றீர்கள்..?
கவிமகன் :- தமிழரின் கலை கலாச்சாரங்கள் நவீனத்துக்குள் புதைந்து போகின்றது என்பதே நியம். 2009 க்கு பின் இதுவே நிலை
நிலவன் :- நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் உங்களின் பங்கு பற்றி கூறுவீர்களா?
கவிமகன் :- அடுத்த தலைமுறைக்கான ஒரு கடத்தியாகவே நான் இருக்கிறேன். அவர்களுக்கு எங்கள் வலிகளை சொல்லும் ஒரு ஊடகமாகவே உருக்கிறேன் எம் வீரத்தை, எம் உறவுகளின் தியாகங்களை அவர்களுக்கு சொல்லும் வழியாக இருக்கிறேன்.
நிலவன் :- போருக்கு பிற்பட்ட சமூக,பொருளாதார சவால்கள் பற்றி சொல்லுங்கள்?
கவிமகன் :- அனைத்தும் சீரற்றே இருக்கின்றன. தார் வீதிகளும் புதுக் கட்டிடங்களும் முளைத்துள்ள எம் ஈழத்தில் உண்ண உணவற்று, உணர்வுகள் ஒடுங்கி வாழும் என் உறவுகளின் வலி மாற்றமுடியாது இருக்கிறது. சண்டை நடந்து கொண்டிருந்த காலம் புலம்பெயர் சமூகம் ஒற்றுமையாகவும் ஒன்றிணைந்தும் இருந்ததைப் போல இன்றும் இருக்குமாயின் போருக்குப் பின்பான வாழ்வும் சரியாக இருந்திருக்கும். ஆனால் இன்று அத்தனையும் தலைகீழாக்கப்பட்டு கிடக்கிறது. சரியான அரசியல் தலையீடுகள் இல்லை. அதனால் இன்றும் கையேந்திகளாகவே எம்மக்கள் வாழ்கிறார்கள்.
நிலவன் :- போருக்கு பிற்பட்டு படைப்பாளிகளின் உளவியல் நிலை பற்றி?
கவிமகன் :- படைப்புக்களில் வலி தொட்டு செல்கிறது. பல படைப்பாளிகளுக்கு அது வாய்ப்பாகவும் அமைந்துள்ளது ஏனெனில் எமது வாழ்வியல் ஒழுக்கங்களை மீறிய பல படைப்புக்களை அவர்கள் சுதந்திரமாக இப்போது வெளிக் கொண்டு வருகிறார்கள் எந்த ஒழுக்க கட்டுப்பாடுகளும் அற்று. அவை எம் இனத்தின் கலை கலாச்சாரங்களை மண்ணோடு எருவாக்கும் என்பது தெரியாமலே. ஆனால் பல நூறு படைப்பாளிகள் வலிகளோடே வாழ்கிறார்கள்.
நிலவன் :- போர் கால வரலாறுகளை பதிவிடுவது பற்றி உங்கள் கருத்து ?
கவிமகன் :- அடுத்த தலைமுறைக்கான ஆவணம்.
நிலவன் :- நீங்கள் அதிகம் மாவீர்ர் சுவடுகளை எழுதுபவர் என்ற வகையில் மாவீர்களின் தியகங்கள் பற்றி சற்று கூறுங்கள் ?
கவிமகன் :- வார்த்தைகளில் எழுத முடியாதவை அவை.
நிலவன் :- போராளிகளின் தியாகங்கள் தொடர்பில் உங்களால் மறக்க முடியாத விடயம் பற்றி ?
கவிமகன் :- பல இருக்கின்றன ஆனாலும் இன்றும் மறக்க முடியாதவன் கப்டன் பூங்கண்ணன். இறுதி சண்டை என்ற இனவழிப்பு சண்டை நடந்து கொண்டிருந்த கொடிய நாட்களில் ஒருநாள் களமுனை வலைஞர்மடம் என்ற இடத்துக்கு நகர்ந்திருந்தது. அப்போது களமுனை விட்டு பின்நகர்ந்திருந்த பூங்கண்ணன் என்னை சந்திக்க வந்திருந்தான். எனக்கும் அவனுக்கும் பயங்கர பசி அப்போது தான் அவன் சண்டையில் இருந்து பின்னால் ஒரு வேலையாக வந்திருந்தான் இரண்டு மூன்று நாட்கள் சாப்பாடு இல்லாத சோர்வு என் வீட்டுக்கு செல்ல வைத்தது. அம்மாவினால் சுடப்பட்ட ரொட்டியை மாஜரீன் பூசி சாப்பிட்டோம். என் கையால் மாஜரீன் பூசி கொடுக்க சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டை விட்டு சென்ற போது ( வீடு என்பது வெறும் தறப்பாளால் கூரையிடப்பட்ட பதுங்கு குழி )உணவுண்டு . 3-4 நிமிடங்கள் இருக்கும் வீட்டில் இருந்து விடைபெற்று 100 மீட்டர் கூட அந்த மணலுக்குள் நடந்திருக்க மாட்டோம் அந்த சம்பவம். அருகில் இருந்த மருத்துவக் கொட்டிலில் இருந்து என்னை அழைத்த மருத்துவனுக்கு பதில் கூற அமர்ந்த போது. வெடித்த கனொன் ஒன்றின் சிதறல் பூங்கண்ணனின் கழுத்துப்பக்கத்தை வெட்டி சென்றது. உண்ட ரொட்டித்துண்டு அந்த கழுத்துக்கால் உள்ளே சென்றிருக்காது. அவன் வீரச்சாவடைந்தான். என் கண்முன்னே அந்த நிகழ்வு நடந்து முடிந்த போது எதையும் செய்ய முடியாதவர்களாக நாம் இருந்தோம்.
நிலவன் :- விமர்சனங்கள் அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் ?
கவிமகன் :- அனைத்தையும் என் படிக்கற்களாகவே நினைப்பேன்.
நிலவன் :- உங்கள் படைப்புகளில் காலம் தாண்டி நின்று நிலைக்கக் கூடியதாக எதைக் கருதுகிறீர்கள்?
கவிமகன் :- மறக்கத்தகுமா…?, நெஞ்சம் தொலைக்குமா என்று நான் எழுதும் தொடர் சண்டைக்கால சான்றுகள்.
நிலவன் :- உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கவிமகன் :- வாசியுங்கள், தோன்றுவதை எம் பண்பாட்டு விழுமியங்கள் தாண்டாது வெளிக் கொண்டு வாருங்கள். தமிழை நேசியுங்கள், எம் வரலாறுகளை ஆவணமாக்குங்கள்.
நிலவன் :- அடுத்த கட்டமாக ஏதேனும் முயற்ச்சியில் ஈடுபடவுள்ளீர்களா?
கவிமகன் :- கட்டாயம்… சண்டை நாவல் ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளிக் கொண்டு வருவேன்.
நிலவன் :-தொடர்ந்து இப்போது உங்கள் தொடர்பான பதிவுகளில் அடிக்கடி பேசப்படும் ஒரு விடயமாக பாடல்கள் இருக்கின்றன இதை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
கவிமகன் :-பாடல் என்பதற்கு நான் புதிதாக ஒரு பதத்தை பயன்படுத்துவேன் “இசைக்கவிதை” அதாவது இசையால் அலங்கரிக்கப்பட்ட கவிதைகள். அவ்வாறான இப்பாடல்கள் பற்றி கூறுவதாயின் உண்மையில் மனது திருப்தியாக இருக்கிறது. நான் எழுதி இருக்கும் பாடல்கள் இசை ரசிகர்கள் மனதை திருப்திப்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன். வானலைகளில் காற்றோடு இசையாக கலந்து என் பாடல்கள் ஒலிக்கும் போது மனம் திருப்தி பெறுகிறது. எங்கோ ஒரு மூலையில் யார் என்றே தெரியாது கிடந்த என்னை வெளியுலகிற்கு அடையாளமிட்ட இந்த எழுத்துத் துறையில் முக்கியமாக பாடல்களும் இருக்கின்றன.
நிலவன் :-உங்கள் பாடல்களில் உங்களை கவர்ந்தது?
கவிமகன் :-அனைத்துமே என்னை கவர்ந்தவை தான்
நிலவன் :-பாடல் தொடர்பாக அடுத்த படைப்பு எதாவது செய்ய இருக்கிறீர்களா..?
கவிமகன் :- கட்டாயமாக இதை பற்றி கூற வேண்டும். “காற்றுவெளியிசை” என்ற ஒரு ஒலிப்பாடல் தொகுப்பை இப்போது செய்யும் பணியில் உள்ளோம். ஈழத்தைப் பொறுத்தவரை அடையாளமிடக்கூடிய இசையமைப்பாளர்களில் ஒருவரான, இரா.சேகர் அவர்கள் இந்த செயற்றிட்டத்தை ஆரம்பித்தார். இப்போது பாடல்கள் உருவாக்கப் பணி நடக்கிறது.
நிலவன் :-“காற்றுவெளியிசை ” பல தடைகளை தாண்டி பயணிக்கிறது என்று அறிந்தேன் அவ்வாறு இருப்பினும், இதன் அடிப்படை நோக்கம் என்ன?
கவிமகன் :-இந்த “காற்றுவெளியிசை” செயற்றிட்டத்தின் அடிப்படை நோக்கம் புதியவர்களுக்கு களமமைத்து கொடுத்தல். அதன் அடிப்படையில், கவிஞர்களாக அறிமுகமாகி இருந்தும் பாடல்கள் எழுதாத புதியவர்களை உள்வாங்கி உள்ளோம். இந்த ஒலிப்பாடல் தொகுப்பில் வரிகளால் பாடல்களை அலங்கரிக்க புதியவர்கள் ஏழு பேரும், ஈழ இசைத்துறையை பொறுத்தவரை அடையாளமிட்டு கூறக்கூடிய இரண்டு மூத்த பாடலாசிரியர்கள் மற்றும் வளர்நிலை பாடலாசிரியர்கள் மூவருமாக பன்னிரண்டு பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதுகிறார்கள். இதில் ஒருவனாக நானும் பணியாற்றுகிறேன்.
நிலவன் :-நீங்கள் “காற்றுவெளியிசை” ஒலிப்பாடல் தொகுப்பின் செயற்றிட்ட இணைப்பாளர் என்ற நிலையில் இப்பாடல் தொகுப்பு பற்றி வேறு என்ன கூற விரும்புகிறீர்கள்?
கவிமகன் :-உண்மையில் இப்பாடல் தொகுப்பு ஈழத்து இசைத்துறையில் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவ்வாறான தனித்துவம் மிக்க உருவாக்க முயற்சியில் நாம் இருக்கிறோம். இது ஒரு அணிச் செயற்பாடு. கிட்டத்தட்ட 25 இற்கும் மேலான ஈழத்து கலைஞர்களின் கூட்டு முயற்சி. அதனால் தோற்காது. நாம் நிட்சயமாக புது அடையாளம் ஒன்றை ஈழத்து இசைத் துறையில் பதிப்போம் என்று நம்புகிறேன். பாடல்களை தம் குரல்களால் வளப்படுத்த ஈழத்தின் இளைய பாடகர்கள் தயாராக இருக்கிறார்கள். இப்போது குரல் தெரிவு நடக்கிறது. முற்று முழுதாக ஈழத்தின் இளைய பாடகர்களை பயன்படுத்துகிறோம். இந்திய திரையுலக சாயலைத் தவிர்த்து எமக்கான தனித்துவத்தை தாங்கி இந்த தொகுப்பு வெளி வர இருப்பது சிறப்பான அம்சமாக நான் கருதுகிறேன்.
நிலவன் :-நல்லது. இந்த படைப்பு வெற்றி பெற நானும் வாழ்த்துகிறேன். இக் கலைஞர்களின் அணிச்செயற்பாடு வெல்லும் அதற்காக அவர்கள் கடினமாக உழைப்பார்கள் என்று நம்புகிறேன்
நிலவன் :- நிறைவாக என்ன சொல்லிட விரும்புகின்றீர்கள்
கவிமகன் :- என் உயிரினும் மேலான “தமிழ் வாழ்க தமிழீழம் அமைக”
நிலவன் :- பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டீர்கள். நன்றி .