தமிழ் மக்களை பொறிக்குள் சிக்கவைத்துள்ள, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் எதிர்க்கவேண்டுமென சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியாகிய இடைக்கால அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றாத ஒன்றாகவே இடைக்கால அறிக்கை இருக்கின்றது. கடந்த காலங்களில் நாம் எவற்றை முன்வைத்து அகிம்சை ரீதியாகவும், பின்னர் ஆயுத ரீதியாகவும் போராட்டம் நடத்தினோமோ அவற்றுக்கு எதிரானதாகவே இந்த இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது.
அத்துடன், குறித்த இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும் தெரிவித்த அவர் ஒற்றையாட்சியானது இன்னும் தற்போது இருக்கும் யாப்பில் உள்ளதைவிட மிகவும் பின்தங்கிய ஏற்பாடுகளையே கொண்டுள்ளது. இவ்வறிக்கையில் ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தமிழ்த் தலைவர்கள் எதிர்க்கவேண்டும். இதனை ஏற்றுக்கொண்டால் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதாகவே சர்வதேச சமூகம் கருதும். இவ்வாறான வரைவுகளை முன்னைய எமது தலைவர்கள் நிராகரித்தார்கள். அதனாலேயே எமது விடயம் பன்னாட்டளவில் பேசப்பட்டது.
தற்போது கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்தும் போராடிப் பெறுவோம்என எமதுதலைவர்கள் கூறுகின்றார்கள். இது பிழையான கருத்து. இதனை நாம் ஏற்றுக்கொண்டால் இத்துடன் எமது பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படும்.
நாம் பொறிக்குள் சிக்கியுள்ளோம். இதனைத் தெரிந்தும் தமிழ்த் தலைவர்கள் ஏன் எதிர்க்கவில்லை. அரசு தமக்குச் சார்பாகச் செயற்படுவதற்கேற்ற தமிழ்த் தலைவர்களை வைத்துள்ளது. இருப்பினும் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.