மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் சடலத்தை சிறிலங்காவுக்கு கொண்டுசெல்வதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
அதனை பப்புவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ளவேண்டுமெனவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் சடலத்தை சிறிலங்காவுக்குக் கொண்டுவருவதற்கு 9ஆயிரம் அவுஸ்ரேலிய டொலரை வழங்குமாறு அவுஸ்ரேலிய தூதரகம் கோரியிருந்ததாக அவரது உறவினரான மதி என்பவரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த அவுஸ்ரேலிய ஊடகம், மனுஸ் தீவில் உயிரிழந்த ரஜீவ் ராஜேந்திரனின் உடலை கொண்டு வருவதற்கு உறவினர்களிடம் அவுஸ்ரேலிய தூதரகம் பணம் கேட்டதாக வெளியான செய்திகள் பொய் என்று கூறியுள்ளது.
ரஜீவ் ராஜேந்திரனின் உடலை கொண்டு வருவது தொடர்பாக, அவுஸ்ரேலிய அரசாங்கத்துடனோ, கொழும்பில் உள்ள தூதரகத்துடனோ, அவரது உறவினர்கள் தொடர்பு கொள்ளவோ, கோரிக்கை விடுக்கவோ இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், பபுவா நியூகினியாவிலேயே ரஜீவ் ராஜேந்திரன் இறந்தார் என்பதால், சடலத்தை திருப்பி அனுப்புப் பணிகளை பபுவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய தூதரகம் கைவிரித்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய ரஜீவ் ராஜேந்திரனை அவுஸ்ரேலிய அரசாங்கமே, பபுவா நியூகினியாவில் அமைத்துள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ரஜீவ் ராஜேந்திரனின் சடலத்தை கொழும்புக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அவுஸ்ரேலிய குடிவரவு திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய போதும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவுஸ்ரேலிய அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.