முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் உறுதிக் காணியினை வடமாகாண ஆளுநர் சிங்கள மக்களிற்கு வழங்குவதற்கு எடுத்துவரும் முயற்சிக்கு காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், தாம் தமது காணிகளை எக்காரணங் கொண்டும் விடுக்கொடுக்கப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் முகத்துவாரப் பிரதேசத்திலிருந்து 1984ஆம்ஆண்டு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதன்பின்னர் அக்காணிகளில் சிங்கள மக்கள் குடியேறியுள்ளனர்.
இது தொடர்பாக குறித்த மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
தமது உறுதிக் காணிகளில் சிங்கள மக்கள் தமக்கு நிரந்தர வீடுகளைக் கட்டித்தருமாறு கோரி வருகின்றனர். அவை எமது உறுதிக் காணிகள், அவற்றை எம்மால்வழங்கமுடியாது.
இதன் காரணமாக அவர்களால் எமதுகாணிகளில் நிரந்தர வீடுகள் கட்டமுடியாமல் உள்ளது. அண்மையில் எமது காணிகளில் குடியேறியுள்ள சிங்கள மக்களையும், பிரதேச செயலரையும் வடமாகாண ஆளுநர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, எமது காணிகளை நிரந்தரமாக சிங்கள மக்களுக்கு வழங்குவது தொடர்பாக முயற்சி எடுத்து வருகின்றார். ஆனால் நாம் எமது காணிகளை ஒருபோதும் அவர்களுக்கு விட்டுக்கொடுக்கப்போவதில்லை.
இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.