புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவ்வறிக்கைக்கு அனைவரும் தமது ஆதரவை வழங்கியுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலக நாடுகளுக்குப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் 8ஆவது மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், முதற் தடவையாக சகல கட்சிகளும் நாட்டில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. நியூசிலாந்து நாட்டின் அரசியலமைப்பை ஒத்த அரசியலமைப்பு ஒன்றுக்கான வரைபை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்டபோது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.
அதேபோன்று அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இடைக்கால அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சியினுள் அதிகாரப் பகிர்வு, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, அதிகாரப் பகிர்வு, புதிய தேர்தல், இனரீதியான தீர்வுகள், உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட நியூசிலாந்து நாட்டு அரசியலமைப்பை ஒத்த புதிய வரைபை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய திருத்தங்கள் தொடர்பாக பரிசீலனை செய்து பார்க்க எமக்கு நல்ல சந்தர்ப்பம் ஒன்றும் கிட்டியுள்ளது.
நாடாளுமன்றத்துக்குள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்துத் தரப்பினரதும் ஆதரவைப் பெற்று நாம் இரண்டாவது கட்டத்துக்கு நகர்கின்றோம் எனத் தெரிவித்தார்.