மோடியைப் போன்ற பொய்யரை வாழ்நாளில் பார்த்ததே கிடையாது என்று சிவசேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி விமர்சனம் செய்து வருகிறது.
சமீபத்தில் மும்பையில் ரெயில்வே மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கி 23 பேர் பலியானதை கண்டித்து சிவசேனா சார்பில் மும்பை ரெயில்வே அலுவலகம் முன் பேரணி நடந்தது. இதில் பேசிய சிவசேனா தலைவர் ராஜ்தாக்கரே பிரதமர் மோடியை மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் பேசியதாவது:-
பா.ஜனதா ஆட்சியில் நாட்டை 2 அல்லது 3 பேர் மட்டுமே வழி நடத்திச் செல்வது போல் தோன்றுகிறது. பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதாவினர் அளித்த எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் அவை தேர்தல் உத்திக்காக கூறப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவே கூறுகிறார்.
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நம்பித்தான் அவருக்கு சிவசேனா ஆதரவு அளித்தது. ஆனால் கடந்த 3½ ஆண்டுகளில் நாடு எந்தவொரு வளர்ச்சியையும் அடைந்ததாக தெரியவில்லை. மோடியை நாங்கள் நம்பினோம். ஆனால் அவர் நமக்கு துரோகம் இழைத்து விட்டார்.
சில வருடங்களுக்கு முன்பு மோடி முதல்-மந்திரியாக இருந்த போது நான் குஜராத் சென்றேன். அப்போது அவர் என்னை தவறாக வழி நடத்தி விட்டார். இப்போது அதை நான் உணர்கிறேன். பா.ஜனதா அரசின் கொள்கைகளை மக்கள் எதிர்க்க தொடங்கி விட்டார்கள். அரசை விமர்சித்து வெளிப்படையாக பேசுகிறார்கள்.
மோடியைப் போன்ற பொய்யரை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே கிடையாது. மோடி பேசினாலே மக்கள் டி.வி.யை அணைத்து விடுகிறார்கள். இதே போல் ரேடியோவை ஆன் செய்தால் ‘மான்கி பாத்’ என மோடி பேசுகிறார். இதைக் கேட்டு மக்கள் விரக்தி அடைந்து விடுகிறார்கள். அவர் எவ்வளவு காலத்துக்குத்தான் பொய் சொல்லிக் கொண்டு இருப்பார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டார். மோடி பணமதிப்பு நீக்கம், யோகா, மேக் இன் இந்தியா போன்றவை பற்றியே பேசுகிறார். இவையெல்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டது. மக்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வில்லை. பெட்ரோல்- டீசல் விலை குறைப்பு பற்றியும், பொருளாதாரம் பற்றியும் மோடி பேசிய பழைய வீடியோவும், இப்போதைய நிலையையும் ஒப்பிட்டு வீடியோக்கள் வைரலாக பரவுகிறது.
மோடியை நாடே நம்பியது. உங்கள் மீது நம்பிக்கை வைத்தார்கள். உங்களுக்கு வாக்களித்தார்கள். நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் மக்கள் இப்போது உணர்கிறார்கள்.
கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வந்து ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி கூறினார். ஆனால் அமித்ஷா அது தேர்தல் யுத்தி என்று இப்போது சொல்கிறார்.
மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டம் மும்பையிலும், ஆமதாபாத்திலும் வசிக்கும் குஜராத்திகளுக்காகத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை எதிர்த்ததற்காகத்தான் சுரேஷ் பிரபு ரெயில் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு பியூஷ் கோயல் ரெயில் மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ராஜ் தாக்கரே பேசினார்.