வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் 25 பேர், நேற்று (06) வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வடமாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வந்தவர்களை ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றிருந்தன.
இந்நேர்முகத் தேர்வில் 1,046 பேர் தோற்றியிருந்த நிலையில் 676 பேர் நியமனம் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டு, அந்நியமனத்துக்கான மத்திய அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்திருந்தது. இந்நிலையில், வடமாகாண கல்வி அமைச்சு 182 பேரே தகுதி பெற்றுள்ளதென தெரிவித்து, அவர்களை நிரந்தர நியமனத்தில் உள்ளீர்ப்பதற்கான பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது.
யுத்த காலப்பகுதியிலும் அதனை அண்டிய காலப்பகுதியில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நாம், வலய மட்டத்திலும், மாகாண, மத்திய அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட பல நேர்முகத் தேர்வுகளில் தோற்றியிருந்த போதும் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா தெற்கு வலய தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நியமனத்திலும் அரசியல் தலையீடு காரணமாக சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீண்டகாலம் கற்பித்து வரும் தாம் கோரப்பட்ட தகமைகள், ஆவணங்கள் இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கோரப்பட்ட தகமைகள் மற்றும் ஆவணங்களை கொண்டிராத சிலர் உள்ளவாங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவே தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள், தமக்கு நீதியைப் பெற்றுத் தருவதுடன, நிரந்தர நியமனத்தில் தம்மையும் உள்வாங்க வேண்டும் எனக் கோரியே மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி அபிராமி பாலமுரளி, வடமாகாண சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ.சாந்தசீலன் ஆகியோருக்கு எதிராகவே பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சார்பாக 25 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.