தியேட்டர் கட்டண உயர்வால் திருட்டு வி.சி.டி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு திரைத்துறைக்கு விதித்துள்ள வரியை குறைக்க வலியுறுத்த வேண்டும். அதை தவிர்த்து மாநில அரசு கேளிக்கை வரி விதிக்க கூடாது என கூறுவது தவறு. இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல். கேளிக்கை வரி இல்லாமல் மாநில அரசு துறையை நிர்வகிக்க முடியாது. தியேட்டர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் அது மக்களுக்கு சுமையாகத் தான் இருக்கும்.
ஏற்கனவே திருட்டு வி.சி. டி.க்கள் அதிகம் 2 புழங்கும் நிலையில், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மக்கள் வரமாட்டார்கள். திருட்டி வி.சி.டி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் பிரதமர், நிதி மந்திரி போன்றோரை சந்தித்து ஜி.எஸ்.டியை குறைக்க வலியுறுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தான், மத்திய அரசு அதில் தற்போது மாற்றம் கொண்டு வர இருக்கிறது என்றார்.
தினசரி விலை உயர்வை கண்டித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நடத்த உள்ள போராட்டம் குறித்த கேள்விக்கு, அம்பானியிடம் கச்சா எண்ணெயும், அதானியிடம் மின்சாரமும் இருப்பதால் அவை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வரப்படாது. அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்ட முதலாளிகள் நலனை மட்டுமே கருத்தில் கொள்ளும் நாடு இது. ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரப்பட்டால் எரிபொருட்களின் விலை கட்டுக்குள் இருக்கும். ஆனால் அரசு இதை செய்யாது .
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் தொடர் மரணங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையினால் டெங்கு கொசுக்களை ஒழிக்க முடியாது. கொசுக்களை கூட ஒழிக்க முடியாத நாட்டில் தான் நாம், ஊழலை ஒழிக்க வேண்டும் என போராடி வருகிறோம் என கூறினார்.