அனைத்து அரசியல் கைதிகளையும் விடு தலை செய்யக்கோரி, 9 ஆம் நாள் திங்கட் கிழமை வவுனியாவில் ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது.
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர். வவுனியா மணிக்கூட்டுச் சந்தியில் உள்ள பேரூந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த பத்து தினங்களாக 3 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையிலேயே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக முக்கியஸ்தர்கள், வியாழனன்று ஒன்று கூடி, இந்த கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஆராய்ந்தனர்
இந்தக் கூட்டத்திலேயே அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி குரல் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்புக்கு மத்தியிலும் அனுராதபுரத்தி;ற்கு மாற்றப்பட்டுள்ள வழக்குகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற மூன்று கைதிகளினதும் வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் பல வருடங்களாக நடைபெற்று வந்தது.
அவர்களுடைய வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் காரணம் காட்டி, இந்த வழக்கு விசாரணை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபரினால் மாற்றப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்துள்ள அந்தக் கைதிகள் மூவரும், தங்களுடைய வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவர்களுடைய வழக்குகளை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவது தொடர்பிலான அறிவித்தல் வெளியாகிய உடனேயே, அதனை எதிர்த்து அவர்கள் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர்.
இவர்களுடைய வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக செப்டம்பர் மாத இறுதிப்பகுதியில் மூன்று தினங்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகள் நடைபெறும் என தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்றம் அதற்கான திகதிகளையும் குறித்திருந்தது.
ஆயினும் வவுனியா மேல் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு மாறாக, அந்த வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையிலேயே அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் பத்து தினங்களாகத் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.