வடக்குமாகாணத்தில் பின்தங்கிய கிராமங்களில் செயற்படும் 446 பாடசாலைகளை மூடிவிட்டு அப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை நகர்புற பாடசாலைகளுக்குச் சென்று கற்பதற்கான வழிகளை வடமாகாண கல்வி அமைச்சு மேற்கொள்ளவேண்டுமென வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற வடமாகாணசபையின் 107ஆவது அமர்வில், வடமாகாணசபை உறுப்பின் லிங்கநாதன், கல்வி அபிவிருத்தி சார்பாக வடக்கு மாகாண பாடசாலைகளின் பின்னடைவுக்கு பல காரணங்கள் இருந்தாலும் சமச்சீரற்ற ஆளணிப் பங்கீடும் அதற்கு மிக முக்கிய காரணியாகும். எனவே பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளுக்கிடையே சமச்சீரான ஆளணியைப் பேணுவதை உறுதிப்படுத்த மாகாண கல்வி அமைச்சு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பிரேரணையொன்றை முன்மொழிந்தார்.
இப்பிரேரணை மீதான உரையின்போதே வடமாகாண விவசாய அமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனத்தை சமச்சீராகப் பேணுவது கடினம். நியமனம் பெற்ற அன்றே பல ஆசிரியர்கள் தமக்கு விரும்பிய இடங்களுக்கு நியமனம் பெற்றுச்செல்கின்றனர். இவ்வாறான நிலையில் நாம் எவ்வாறு சமச்சீரான நியமனத்தை வழங்கமுடியும். எனவே கிராமப்புற பாடசாலைகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் செல்லக்கூடிய நகர்ப்புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார்.