தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 85 பேர் பலியாகி உள்ளனர். 12 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில், 90 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 12 ஆயிரம் பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 1,150 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், தினமும் காய்ச்சல் பாதிப்பால் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களில், ஒரு சதவீதம் பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் இருப்பவர்கள், கட்டாயம் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும், அவ்வாறு சிகிச்சை பெறும் பட்சத்தில், நோய் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில் நோயாளிகள் வரும் போது தான் சிகிச்சை பலன் இன்றி உயிர் பலி ஏற்படுகிறது. இதுவரை, டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 85 பேர் உயிர் இழந்து உள்ளதாக கூறப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தர்மபுரியில் அரசு சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 650 டாக்டர்களும், 2 ஆயிரம் நர்சுகளும் நியமிக்கப்பட இருப்பதாக கூறினார். மேலும், 744 சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.