அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காஷ்மீரில் உள்ள பள்ளி குழந்தைகளிடையே உரையாற்றினார்.
இந்தியாவின் குழந்தைகள் உரிமை போராளியான கைலாஷ் சத்தியார்த்தி பாரத் யாத்ரா என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரிடமும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியை கன்னியாகுமரியில் தொடங்கினார்.
ஒரு வாரத்திற்கு முன் உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இந்நிலையில், இன்று காஷ்மீரில் உள்ள பள்ளி குழந்தைகளிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
குழந்தைகள் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அகிம்சை முறையில் ஒற்றுமையாக செயல்பட்டால் நாம் இந்த போராட்டத்தில் வெற்றி பெறலாம். பிரிவினைவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவு செய்வதற்கு குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது கூறினார். குழந்தைகள் எதையும் சாதிக்கும் திறனுடையவர்கள். அதனை கல்வி மூலம் சாதிப்பார்கள்.
மேலும், குழந்தைகளுக்கு கல்வி என்பது மிக அவசியம். அதனால் மத்திய மற்றும் மாநில அரசு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கல்வி குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும். நான் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக பாடுபடுவேன். அவர்களை வன்முறைகளிலிருந்து காப்பாற்றுவேன்.
குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிராக போராடும் இந்த அமைப்பில் 9 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இது 12 லட்சமாக அதிகரிக்கும். மேலும், சமூக ஊடகங்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இவ்வாறு கைலாஷ் சத்தியார்த்தி ஸ்ரீநகரில் உள்ள பள்ளி குழந்தைகளிடம் உரையாற்றினார்