அனுராதபுரச் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளுக்கும் அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மாநகர, நகர, பிரதேச சபைகள் மீதான திருத்தச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்சன் ஆகியோர் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வவுனியாவில் நடைபெற்றுவந்த இவர்களின் வழக்கு விசாரணை அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் மூவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் கோரிக்கை சாதாரணமானதே. அதனை நிறைவேற்றுவதற்கு சட்டமா அதிபர், சட்டம் ஒழுங்கு அமைச்சர்கள் தலையிட்டு இந்த விடயம் தொடர்பாக முடிவெடுக்கவேண்டும்.
அத்துடன் மாந்தை மற்றும் மடு ஆகியவற்றை பிரதேச சபைகளாக மாற்றியமைக்குமாறு நாம் விடுத்துவரும் கோரிக்கை நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
அக்கரைப்பற்று பிரதேச சபையை 24 மணித்தியாலங்களுக்குள் நகர சபையாக மாற்றமுடியுமெனின் ஏன் இதனைச் செய்யமுடியாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.