நாங்கள் சிங்களவர்களை பகைத்து வாழமுடியாது; இருப்பினும் அவர்களை அண்டி வாழ்வதென்பது எம்மை நாமே ஏமாற்றுவதாகும். யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு முன்னேற நாமனைவரும் ஒன்றிணையவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
எமது தலைவர்களின் சிந்தனையில் தெளிவு ஏற்படவேண்டும். நாம் சிங்களவரைப் பகைத்து எதுவும் பெறமுடியாது அவர்களை அண்டி வாழ்வதே ஒரே வழி என்று எண்ணுவது எம்மை நாமே ஏமாற்றுவதாக முடியும்.
யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்னேற யாவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு முட்டுக் கட்டைகள் ஏற்படுத்துபவர்களை அடையாளம் கண்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். இடைக்கால அறிக்கையைப் பார்க்கின்ற போது களமும் புலமும் கைகோர்க்க வேண்டிய கட்டம் வந்துகொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.
மேலும்,வடமாகாண முதலமைச்சரை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து விளக்கமளிக்கையில்,
என் மீது எவருக்குமே வெறுப்பு இல்லை. தங்கள் மீதும், அரசியல் தரக்கூடிய அதிகாரங்கள் மீதும், தம்முடைய எதிர்காலம் மீதும் அவர்களுக்கிருக்கும் அலாதியான பிணைப்பே அவர்களை அவ்வாறு நடந்து கொள்ளச் செய்கின்றது.
ஒரு உதாரணத்தைத் தருகின்றேன். 2015ம் ஆண்டு ஜனவரி 8ந் திகதி புதிய அரசாங்கம் வந்ததும் பலவிதமான எதிர்பார்ப்புகள் தமிழர் தரப்பில் இருந்தன. அந்தக்கால பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தீர்களானால் அரசியல் செய்திகள் பல பத்திரிகைகளில் வெளிவந்தன. இன்னாருக்கு இந்த அமைச்சு என்றெல்லாம் வெளிவந்தன. எமது ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதால் அவ்வாறான எதிர்பார்ப்புக்களை நாம் பிழையென்று கூற முடியாது.
ஆனால் நாம் வடமாகாணசபையில் அதே வருடம் பெப்ரவரி 10ந் திகதி இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை நிறைவேற்றிய போது இன்னாருக்கு இந்த அமைச்சு என்ற அரசியல் செய்திகள் நிறுத்தப்பட்டன. சிலரின் எதிர்பார்ப்புக்களும் அப்போது சுக்கு நூறாக்கப்பட்டன. இதனால்த் தான் வெளித்தோற்ற அமைதிக்கும் தமது எதிர்பார்ப்புக்களுக்கும் பங்கம் விளைவிக்கக் கூடிய ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வருகின்றது.
இது உண்மையில் எம்மவர் சிந்தனையா அல்லது கொழும்பின் அதிகார பீடத்தின் சிந்தனையின் ஒரு பரிமாணமா என்று தெரியவில்லை. அந்த அதிகாரமையத்திற்கு அண்மித்த எம்மவர்கள் அந்த அதிகார பீடத்தின் எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்தவும் இவ்வாறான காரியங்களில் இறங்கியிருக்கக்கூடும். என்னைப் பொறுத்த வரையில் எம் மக்கள் சார்பான ஒரு வழக்கைக் கையேந்தி உள்ளேன். வழக்கை எனது கட்சிக்காரர்களான தமிழ்ப் பேசும் மக்கள் சார்பில் நடத்தி முடிப்பது எனது கடமை. அதையே நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன். சவால்களைக் கண்டு துவண்டு விடக்கூடாது.
உங்களுக்கு இன்னொன்றையும் கூற வேண்டும். எமது கட்சி மட்டும் அல்ல எமது ஆளுநர் கூட எதிர் நடவடிக்கைகளில் எமக்கெதிராக ஈடுபட்டுவருகின்றார். அமைச்சரவை கோரும் செயலாளர்களை எமக்குத் தராமல் தாக்காட்டித், தாமதித்து எமது நிர்வாகத்தை தடை செய்யப் பார்க்கின்றார். தடை செய்துவிட்டு வடமாகாணசபை நிர்வாகத்திறன் இல்லாதது என்ற கருத்தை முன்வைக்கப் பலர் ஒன்று கூடியுள்ளார்கள்.