அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாளை மறுநாள் –(13-10-2017) வெள்ளிக்கிழமை- வடக்கு மாகாணத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அன்று காலை 09:30 மணியளவில், வடக்கு மாகாண ஆளுனர் செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ் மக்கள் பேரவை, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, வடமாகாண புதிய அதிபர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழ ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞாக ஆய்வு மையம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு, யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம், தமிழ் சிவில் சமூக அமையம், அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய அமைப்புகளுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளும் இணைந்து இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.