இனிவரும் காலங்களில் வடமாகாண பாடசாலைகளில் நடத்தப்படும நிகழ்வுகளில் பரதம், காவடி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவேண்டாம் என வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி கல்வி வலயத்தின் முழுநிலா நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழினத்தின் புனிதமான கலைகளான பரதநாட்டியம் மற்றும் காவடி ஆட்டம் ஆகியவற்றை மாணவர்களுக்குப் பழக்கி சாலைகளில் ஆடி அவற்றின் தரத்தைக் குறைக்காதீர்கள். இதுஎமதுபாரம்பரியக் கலைகளை அவமதிக்கும் செயல் என்றே நான் கருதுகின்றேன்.
பரதம் என்றால் மேடைகளில் அரங்கேற்றப்படவேண்டும். காவடி என்றால் அது ஆலயங்களில் அடியார்களால் பயபக்தியுடன் எடுக்கப்படுகின்றது.
இவற்றைக் காட்சிப்படுத்தும் விதமாக தெருவோரங்களில் வைத்து காண்பித்து புனிதமான கலைகளின் பெருமையை நாம் அழிக்கக்கூடாது. இவை எம்மை அறியாமலே எமது பாரம்பரியக் கலைகளை கேவலமாக கருதவைத்துவிடும்.
வருங்காலத்தில் பாடசாலை மாணவர்கள் பரதம், காவடி போன்றவற்றை நிகழ்வுகளில் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
எம்மத்தியிலிருந்து மறைந்துள்ள இசைக்கருவிகளை மீண்டும் மாணவர்களுக்கு பயிற்றுவித்து அதன்மூலம் கலையை வளர்க்கவேண்டும்.
அத்துடன் இந்தியாவிலிருந்து பயிற்றுவிப்பாளர்களை வரவழைத்து மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி எமது பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் உறுதியளித்தார்.