ஏனோ தெரியவில்லை இரவு முழுவதும் உன் நினைவுடா நண்பா…
ஏன் வந்தாய்?
தெரியவில்லை
என் தூக்கத்தை
தொலைத்தாய்
காரணம் புரியவில்லை
எமை நெஞ்சாளும்
உமையாளனே
நினைவில் இருக்கிறதுடா
கல்விக்காக ஓரணியில்
நாம் இருந்த அந்த நாட்கள்
பசுமையாய் கிடக்கிறது
ஒரு வருடம் படிப்பதாய்
நாம் நடித்த போது
நீ அதிலும் வென்று நின்றாய்
அது முடித்து நாம் புறப்பட்டோம்
தனித்தனிப்பாதை
அறியமுடியாத தூரம்
ஒவ்வொருவரும் ஒரு திசையில்
சென்ற போது – நீ
மட்டும் ஏதோ ஒன்றின்
காத்திருப்பில் இருந்தாய்
அதுவும் நினைவிருக்கு
அனைத்து முடிந்து விட்டதாய்
நாம் உணரத் தொடங்கிய
ஒரு அந்தி சாயும் அந்த
மாலைப் பொழுது
ஒன்றாக கிணற்றடியில்
தண்ணீருடன் மல்லுக்கட்டி
உடல் குளித்து
போறன் மச்சான் என்றாய்
வருவாய் என்று தானே
காத்திருந்தேன்
நாட்கள் ஒரு வாரமாகிய போது
நிரோஜன் வந்தான்
உன்னை செய்தியாய் சொன்னான்
தாங்க முடியா மனசுடன்
உன்னை இறுதியாக
பார்க்க இரட்டைவாய்க்கால்
ஓடிவந்தோம்
உனக்காக மூன்று ரவைகளை
முழக்கி முடித்து விட்டார்கள்
நீ அமைதியாய் ஓரிடத்தில்
இருக்க மாட்டியே நண்பா
இப்போது மட்டும் எப்படி
சிங்களன் ஏறி மிரித்தாளும்
ஈழ மண்ணில் எம் நினைவுகளை
தொலைத்து உறங்குகிறாய்…?