பெண்… கடவுளர்களுக்கு இணையாக உயரத்தில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒரு உன்னதமான நிலை ஆனால் எமது சமூக கட்டமைப்பு பெண்ணை ஓர் அடிமையாகவும் அவர்களை ஆணுக்கு நிகரானவளாகவும் ஏற்க மறுத்து சமத்துவமற்ற ஓர் ஏற்றத்தாழ்வு மனநிலையிலையே வைத்திருப்பது நியமானது. பெண் என்பவள் ஆற்றல் இல்லாதவள் பிள்ளைப்பேறுக்கம் சமையல் கலைக்கும் மட்டுமே உரித்தானவள் என்ற ஒரு மனநிலை எமது சமூகத்தில் வேரூன்றி போய் கிடப்பதை நாம் மறுக்க முடியாது.
வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் அவளது உள்ள கிடைக்கைகளை புதைத்து பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர். அழகி என்பதால் சீதையை இராவணன் கடத்துவதும் அதால் இராமன் போர் தொடுத்து செல்வதும் சண்டை முடித்து வந்த பின் அதே இராமன் தனது மனைவியை சந்தேகத்தோடு தீ குழிக்க வைத்ததும், மகாபாரதத்தில் சக்கரவர்த்தினியாகிய பாஞ்சாலியை ஐவர் மணப்பதும் துரியோதனன் துகில் உரிவதும் என்று எந்த புராணத்திலும் பெண் என்பவள் கவர்ச்சி பொருளாக்கப்பட்டே இருந்தாள். அதையே இன்றைய திரையுலகமும் பின்பற்றுவது வேதனை மிக்கது.
ஆனாலும் வன்னி வளநாட்டார் பாடலில் ஆனையை அடக்கிய அரியாததை என்ற பாடல் மூலம் தமிழ் பெண்ணின் வீரமும் புலப்படுத்தப்பட்டுள்ளது. என்பதை நாம் கண்டு கொள்ளலாம். இது இவ்வாறு இருந்தாலும் எமது சமூக கட்டமைப்புக்கள் அனைத்தும் பெண்ணை அடிமையின் ஒரு சின்னமாகவே வெளிக்காட்ட விரும்பின. அவள் ஆணின் பணியாளியாகவும் ஆணுக்கு சேவை செய்யும் ஒரு சேவகியாகவுமே மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது எமது சமுதாய கட்டமைப்பு
ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி கொள்வதும். பெண் பிறந்துவிட்டால் கவலை கொள்வதும். இந்தியாவின் சில கிராமங்களில் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தையை சாகடிப்பதும் கூட தடுக்க முடியாத வரலாறாக தொடர்கிறது.
ஆனாலும் இன்றைய இளைய சமுதாயம் இதை எல்லாம் முறியடித்து பயணித்து கொண்டிருக்கின்றது உண்மையே. அது அப்பிடி இருந்தாலும் சிறிய அளவிலேயே இருப்பது தான் வேதனை மிக்கது ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்த வினாவுக்கான விடையை எங்கள் தேசத்தில் எங்கள் பெண்கள் தந்து நின்றனர்
எமது தமிழீழ சனத்தொகையில் சரிபாதியினர் பெண்கள். இப்படியான எண்ணிக்கையுள்ள பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். இந்த அடிப்படை விடுதலை இல்லாத சீதனம் சாதியம் போன்ற விலங்குகளை உடைத்தெறிந்து அவர்களுக்கான நல வாழ்க்கையினை உருவாக்க வேண்டும் எனில் எமது பெண்களின் வீரம் களத்தில் நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.
அவர்களாலும் ஆணுக்கு சரி நிகராக அத்தனை சாதனைகளையும் செய்ய முடியும் என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும், இதற்காகவே அவர் எமது அமைப்புக்குள் பெண்கள் அணியை உருவாக்கி வீர சாதனைகளை செய்தி காட்டினார். மகளிர் படையணிகள் உருவாக்கம் கண்டன. ஆண் போராளிகளின் படையணிகள் என்ன என்ன களங்களில் செய்தார்களோ அத்தனையையும் பெண் போராளிகளும் செய்து காட்டினார்கள். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. ஆனாலும் எங்கள் பெண் போராளிகள் புரிந்த சாதனை பட்டியல்கள் நீண்டு கொண்டே போனது.
சாதி மத ஆண் பெண் வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருக்கும் எமது சமூகத்தில் இருந்து விழித்தெழுந்தனர் எமது யுவதிகள். கடலில், காட்டில், தரையில் அரசியலில், சண்டையில், தொழில்நுட்பத்தில் வேவில், புலனாய்வில் என்று எதை எல்லாம் சாதிக்க முடியுமோ அதை எல்லாம் சாதித்து வீர காவியமாகினர்.
இதற்கு வழிகாட்டினாள் மாலதி என்னும் சகாயசீலி. இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக கோப்பாய் சந்தி கிறேசரடியில் இரவு பகலாக தனது செல்ல எம் – 16 வகை இயந்திர துப்பாக்கியோடு காத்திருந்தவள் மாலதி. அமைதிப்படை என்று வந்து தமிழீழம் எங்கும் வன்புணர்வுகள், கடத்தல்கள் கொலைகள் என்று அவலங்களை எங்கள் மண்ணில் விதைத்து கொண்டிருந்த இந்திய படைகளுக்கு எதிராக அவள் தனது கருவியை இறுக்க பற்றி கொண்டு காவல் இருந்தாள்.
அவளுக்குத் தெரியும் முன்னேறி கொண்டிருந்த இந்திய படைகளின் நகர்வு என் வித்துடல் மீது ஏறித்தான் என்னை தாண்டும். துணிவும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் மண் மீது கொண்ட பற்றும் மீண்டு மீண்டும் அவளை அந்த வார்த்தையை உச்சரிக்க வைக்கிறது. அவள் காவல் காத்து மண்ணையும் மக்களையும் காத்து கொண்டிருக்கிறாள். இந்தியம் தனது சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கி முன்னேறுகிறது. அவளது துப்பாக்கி சீறுகிறது இறுதிவரை எதிரியை தனது பக்கம் வரவிடாது அந்த துப்பாக்கி அனலை கக்கி கொண்டு இருந்தது.
மாலதி வீர மங்கை என்பதை உலகுக்கு உணர்த்தி போரிட்டாள் அப்போது தான் பாய்ந்து வந்த ரவைகள் அவளது உடலை துளைக்க துப்பாக்கியை தலைவரிடம் சேர்க்க கூறிய வேண்டுகையோடு அவள் சாய்ந்து கிடக்கிறாள். தோழிகள் அவளை மீட்க முயல்கிறனர், ஆனாலும் தனது உயிரை விட துப்பாக்கி தான் முக்கியம் அதை தலைவரிடம் சேர்த்து விடுங்கள் என்ற கோரிக்கையோடு விழி மூடி எங்கள் தேசத்தின் முதல் பெண் வித்தாகி போகிறாள் மாலதி. இது எமது மண் கண்ட முதல் பெண் மாவீரர் என்ற முதல் சம்பவம், ஆனாலும்,
அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது.
அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.
எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேச விடுதலையையும் சாத்தியமாக்கலாம்.இதையே தேசிய தலைவர் சாதித்து காட்டி இருந்தார்.
எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நின்றார்கள் எங்கள் பெண்கள் . இதில் முக்கியம் பெறுவது மாலதியின் பெயர் தாங்கி நின்ற மாலதி படையணி என்றால், அதை சிங்களமே அடித்துக் கூறும். இதுவே நியம்.மேற்கத்தைய தேசத்தில் பெண் உரிமைக்காக போராடியவர்கள் இப்போது சுதந்திரமடைந்து இருப்பதை போன்று எமது தாயகத்திலும் பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை.
மேற்குலக நாடுகளில் பெண்ணுரிமைகள் இப்போது மதிக்கப்படுவது ஏற்றுகொள்ள பட வேண்டிய ஒன்றாகும். அதனால் தான் விண்ணிலே ஏறி ஆய்வு செய்யும் அளவுக்கு கல்பனா போன்ற பெண் விஞ்ஞானிகள் உருவாக்கம் கண்டுள்ளார்கள். ஆனாலும் இப்போதும் பல நாடுகளில் அதாவது சிரியா, எகிப்து. ஈரான், ஈராக், சவுதி, பாகிஸ்த்தான் போன்ற நாடுகளில் பெண்ணடிமை தனம் உச்சத்தில் இருப்பதை மறுக்க முடியாது. இது பெண்களை இழிநிலைக்கு இட்டுச் சென்றது.
இதை விட தாயகத்தில் அண்மைக்காலங்களாக எழுந்து நிற்கும் வன்புணர்வு சம்பவங்கள் அனைத்தும் இன்றைய காலத்தில் இந்த பெண்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலை இருப்பதால் தான் பெண்களுக்கு இப்படியான நிலை உருவாகிறது என்று நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களே கூறும் அளவில் எமது பெண்களின் நிலை மீண்டும் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் அன்று தலை நிமிர்ந்து நின்றனர். இன்று மீண்டும் மண்ணுக்குள் முடக்கப்பட்டு கிடக்கிறார்கள். அண்மையில் வன்புணர்வு செய்து படுகொலை செய்த குற்றத்துக்காக யாழ்ப்பாணத்தில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இவ்வாறாக தான் இன்றைய தாயக பெண்கள் நிலை இருக்கிறது. அன்று கிருசாந்தி, சாரதாம்பாள், தர்சினி என்று தொடர்ந்த வன்புனர்வு படுகொலைகள் இன்றும் வித்யா, சரண்யா, ஹரணிகா என்று தொடரும் இந்த படுகொலைகளின் முடிவு?
அனைவரும் கூறவுதைப் போல் இருப்பவர்கள் இருந்தருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா…?
தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர். ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வந்தார்கள். இவை எல்லாவற்றையும் உடைத்தெறிந்து எமது தமிழீழ பெண்கள் சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருந்தார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்தார்கள்.. எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிட கூடிய அளவுக்கு அவர்கள் முதிர்ச்சி பெற்றிருந்தார்கள் ஆனால் இன்று அப்படியான நிலை இல்லை
மீண்டும் எமது இனம் அடிமைக்குள் உட்புகுந்து ஆணாதிக்க வாதிகளால் அடக்கப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. .எங்கள் தேசத்து பெண்ணினமே நீ எழ வேண்டிய நேரம் இது. உனது உரிமைக்காக போராடிய பெண் போராளிகள் மௌனித்து இருந்தாலும் உன்னாலும் முடியும் என்று எழுந்து நில் உன் வரலாற்றை நீயே படைப்பாய். மாலதி காட்டிய வழியது பற்றி நடந்து செல் நீ இலக்கடைந்து சுந்தந்திர பறவைகளாக வானில் பறப்பாய்
– கவிமகன்.இ
10.10.207