சசிகலாவுடன் கட்சி பிரச்சினை பற்றி விவாதித்தீர்களா? என்ற கேள்விக்கு டி.டி.வி. தினகரன் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு நேற்றுடன் 5-நாள் பரோல் முடிந்தது. இந்த 5 நாட்களில் அவரை உறவினர்கள் மட்டும் சந்தித்து பேசினார்கள். இந்தநிலையில் சசிகலாவின் அக்காள் மகனும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி. தினகரன் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை மாலை 6 மணி வரை நீடித்தது.
இந்த ஆலோசனையில் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை நவம்பர் 2-ந்தேதி ஐகோர்ட்டில் மீண்டும் வர இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த கூட்டத்திற்கு பிறகு டி.டி.வி.தினகரன் காரில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். காரில் இருந்தபடி அவர் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் விஷயத்தில் தமிழக அரசு மிகவும் அலட்சியமாக இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மர்ம காய்ச்சல் என்று கூறி நோயை மறைப்பதிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியே டெங்குவால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்சியில் செயல்பாடு இல்லை. அதனால் தான் என்னை சந்திக்க வந்த நிர்வாகிகளிடம், தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் டெங்கு குறித்து விழிப்புணர்வு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறேன்.
இந்த அரசாங்கம், டெங்கு பிரச்சினையில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலும் மெத்தனமாகத் தான் நடந்து கொள்கிறது. அவர்களுக்கு ஆட்சி இருந்தால் போதும், இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொண்டால் போதும், அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்து ஒவ்வொரு நாள் ஆட்சியையும் கடத்தினால் போதும் என்று தான் நினைக்கிறார்கள். மக்கள் காய்ச்சலால் செத்து மடிகிறார்களே? அவர்களை காப்பற்ற வேண்டுமே என்ற கவலை அவர்களுக்கு ஒருபோதும் இல்லை.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் இறந்து இருக்கிறார்கள். ஆனால் அந்த எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறார்கள். அதனால் தான், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும், மீண்டும் தேர்தல் வர வேண்டும் என்று சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்த நிலையில் அவருடன் கட்சி பிரச்சினை தொடர்பாக நீங்கள் விவாதித்தீர்களா? என்று கேட்டனர். இதற்கு டி.டி.வி.தினகரன், எந்த பதிலையும் அளிக்காமல் காரில் வேகமாக புறப்பட்டு சென்று விட்டார்.