2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அடுத்த ஆண்டில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, வடக்கு மாகாணசபைக்கு, மீண்டெழும் செலவினத்துக்கு 18,650,939,000 ரூபாவும், மூலதனச் செலவுக்கு 3,823,122,000 ரூபாவும் ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 22,474,061,000 ரூபா வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்படவுள்ளது.
எனினும் கடந்த ஆண்டு திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டத்துக்கு அமைய, வடக்கு மாகாணசபையின் மீண்டெழும் செலவினத்துக்கு 16,174,251,000 ரூபாவும், மூலதனச் செலவுக்கு 8,818,000,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, மொத்தம், 24,992,251,000 ரூபா கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு, சுமார், 2,518,190,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மீண்டெழும் செலவுக்கான ஒதுக்கீடு சற்று அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மூலதனச் செலவுக்கான ஒதுக்கீட்டில் பெரும் வெட்டு விழுந்துள்ளது.