கால் நீட்டி தூங்க
முடியாதளவு சனக்கூட்டம்
நிறைந்திருந்த முகாம் அது.
பக்கத்திலிருப்பவரோடு பேசிடமுடியா
அழுகுரல்கள் நிறைந்த காலம் அது.
இரத்த வாடைகளும் விரக்தி மனசுகளும்
பேசிக்கொண்டே இருந்தன.
நாற்றிசையும் சன்னங்களோடு
நடைபயின்று கொண்டிருந்தார்கள்
சிப்பாய்கள் பலர்..
சப்பாத்து கால்களும்
சிகரட் வாசணைகளும்
எவ்வேளையிலும் முத்தமிட்டுக் கொண்டிருக்கும்.
தேத்தண்ணீ பானையின்
நீர் ஆவியாதல் போல்
பலரின் கண்ணீர்களும்
ஆவியாகிக் கொண்டிருந்தன.
அந்த கூடாரமும்
மூன்று குடும்பங்களின்
பதினாறு பேர்களோடு
கண்மூடிக் கொண்டிருந்த
நடுநிசியது..
இலக்கியா அதிகாலை எழுவதாகவும்
நிறைந்த சனத்திரளில்
தந்தையின் தோழேறி சவாரி புரிவதாகவும்
தனது தோழியுடன்
மண்சோறும் , தடிக்கறியும்
சமைத்துண்பதாகவும்
கனவுகண்டு கொண்டிருந்த வேளையில்தான்
நிலா இடிந்து கூடாரம்
அழுது கொண்டிருந்தது..
என்ன நடந்தது?
எங்கிருந்து வந்தீர்கள்?
யார் நீங்கள்?
எதுக்காக அழைக்கிறீர்கள்?
நானும் கூட வருகிறேன்.
தாயின் கதறல்களோடு
வினாக்கள் அடுக்கப்பட்டுக்கொண்டிருக்க
பதில்கள் மறைந்து கொண்டேயிருந்தன..
அப்பா எங்கே?
ஏன் பிடித்தீர்கள்?
ஒரு முறை காட்டுவீங்களா?
இருக்கிறாரா? இல்லையா?
பதில் சொல் ந(வ)ல் ஆட்சியே!
இலக்கியாவின் கண்ணீர் கலந்து
பதாதைகள் பேசுகின்றது
காணாமல் ஆக்கப்பட்டோர்
ஆர்ப்பாட்டமொன்றில்..
– நெடுந்தீவு தனு