சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு விசாரணை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில்
நேற்று விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் அறிவிப்பதற்கு, திகதியொன்றை வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை இன்றுமுன்னெடுக்கப்பட்டது.
கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவரின் காரில் இருந்த கைவிரல் அடையாளங்கள், விசாரணைக்காகப் பெறப்பட்ட கைவிரல் அடையாளங்களுடன்
பொருந்தவில்லை என இதன்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
அத்துடன், லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரரின் கையெழுத்து சோதனைக்காக
அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.