வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன முன்னணி 200 இற்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும்.
2015இல் நடந்த அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணி 150 உள்ளூராட்சி சபைப் பிரதேசங்களைக் கைப்பற்றியது.
இந்த தேர்தலில் மேலதிகமாக 50-60 வரையான உள்ளூராட்சி சபைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்.
இப்போது நாங்கள் இன்னும் பலமடைந்திருக்கிறோம். 200 உள்ளூராட்சிசபைகள் எமது வசமாவது உறுதி.
கூட்டு எதிரணியில் உள்ள மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்டவற்றுடன் இணைந்து போட்டியிடுவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். வடக்கிலும் போட்டியிடுவோம்.
மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஒரே தேர்தல் அறிக்கையின் கீழ் தேர்தலில் நிற்போம்.
தேசிய நலன்கள் விவகாரத்தில் பொதுஜன முன்னணியின் முயற்சிகளுக்கு கோத்தாபய ராஜபக்ச ஆதரவு அளிப்பார்.
அவர் தேர்தல் மேடைக்குச் சென்றதில்லை எனினும், முக்கியமான தருணங்களில் அவர் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார். நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு அவர் எதிராக இருக்கிறார். அதற்காகவே எலிய அமைப்பையும் தொடங்கியுள்ளார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.