இந்தோனோசியாவில் போராட்டத்தை ஏற்பாடு செய்தார் என்ற காரணத்தினால் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர்அந்நாட்டுக்காவல்துறையால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் உயிரச்சுறுத்தல் காரணமாக ஈழத்தமிழர்கள் பலர் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டு அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் வழியில் இந்தோனேசியக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டு இந்தோனேசியாவின் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தின் தலைநகரமான மெடானில் 300ற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மீண்டும் சிறிலங்காவுக்குச் செல்லமுடியாது என்பதை உறுதிப்படுத்தி இவர்கள் அனைவரும் அகதி அந்தஸ்த்து பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் தமிழர்கள் என்ற காரணத்தினால் அகதி அந்தஸ்த்து வழங்கிய வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு இந்தோனேசிய அரசாங்கம்மறுத்து வருவதாக குறித்த அகதிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், தம்மை வேறு நாடுகளுக்கு அனுப்புமாறு கோரி அகதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நாதன் பார்தீபன் என்ற ஈழ தமிழ் அகதி கைது செய்யப்பட்டுள்ளார்.