அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடைய உடல்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
இந்தநிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டங்களும் நடந்துவருகின்றன.
அவை தொடர்பாக சிறிதும் சிந்திக்காத ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதந்து தேசிய தமிழ்தின விழாவில் கலந்து கொள்கின்றமை தமிழ் மக்களின் உரிமை குரலுக்கு செவிசாய்க்காத தன்மையே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியுள்ளார்.
14 ஆம், 15 ஆம் திகதிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 3 பேர் தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றவேண்டாம் என கூறி தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்ட த்தினை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி தமிழ் அரசியல் கைதிகளின் நீதியான கோரிக்கையினை கவனத்தில் எடுக்ககோரி தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் நடத்தப் படுவதுடன் அரசியல் தரப்புக்கள் நாங்களும் பேசிவருகிறோம்.
ஆனால் அவற்றை சிறிதும் கருத்தில் எடுக்காத ஜனாதிபதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் அரசியில் கைதிகளின் விடயத்தில் சரியானதும், நீதியானதுமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்வரை ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளபோவதில்லை என்றும் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (13) ஜனதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறினார்.