அமைதியை விதைத்த வயல்களில்
அறுவடையும் அன்புமாய்
ஆறுதலுடன் இருந்தது எங்கள் வாழ்வு
போரியல் முதல் பொருளாதாரம் வரை
புகழுடன் விளங்கி புன்னகை
பூத்தது எம் தேசம்
இரு இனம் ஒரு நாடு .
பொறுமையாய் இருந்து பின்
பொங்கி பிரிந்து தனி ஒரு ஆட்சியும்
தமிழனின் நாடுமாய் தவழ்ந்ததே எம் ஈழம்
தலை நிமிர் உணர்வுடன் தமிழராய்
வாழும் வலி நிறை வாழ்வுடன்
தாயகம் மீதினில் அன்று ..
கொடியது தெய்வம் கூற்றமும் அதுவே
நொடியினில் எமை நோக்கி நூறாயிரம் குண்டுகள் ..
வானமும் இருண்டது வையகம் மருண்டது
விடை எது கேள்வி எது முடிவுகள் அறியாது
ஒரு கணம் மனதினில் பயமது வரினும்
படை உண்டு எம்மிடம் தடையது
உடைந்து நொடியினில் முடியும்
முடிந்ததும் விடியும் எனும் ஆவலில்
இரு பெரும் பிரளயங்கள் இடிந்து மண் வீழ்வது போல்
நொடியினில் பொடிகள் ஆகி வெடித்தது வன்னி மண்ணும்
காலனும் கடவுளரும்
விழியிடை கனலை ஏந்தி.
காரிருள் வேளையிலும்
களத்திடை வீர யுத்தம்
சூழவும் களங்கள் கொண்ட சுந்தர
வன்னி மண்ணும்
சோர்வினை விட்டெறிந்து
போர் நெறி மீறா வண்ணம் பூகம்பம் கிளப்பியது.
காலடி மண்ணில் யுத்தம்
கடலிடை வேட்டு சத்தம்
வானமே இடியும் வண்ணம்
முச்சங்கினை ஊதியது .
வாலிபம் முறுக்கெடுத்த வடிவினர்
அத்தனையும்
காளையர் கன்னியரும் மண்ணிடை
காதல் கொண்டு
ஆரியம் தனை அழிக்கும் வீரியம்
நெஞ்சில் ஏற்றி
போரியல் பொறி முறையின் சாவியாய்
சமர்களத்தில்.
வெற்றியும் எங்கள் பக்கம்
வீரமும் எங்கள் பக்கம்
மானமும் எங்கள் பக்கம் _வீர
மரணமும் எங்கள் பக்கம்
வீரத்தை நெஞ்சில் ஏற்றி
ஓர்மத்தை கனலாய் மாற்றி
ஓரிரு களம் தவிர்ந்த யாவிலும்
வேட்டின் சத்தம் கூடவே இரு புறமும்
சரி நிகர் சாவின் முத்தம்
வேர்கடலை விற்ற வீரம் ஒன்றும் காட்டவில்லை
போர்கலையின் உச்சம் புலியணியும் காட்டியது
ஆள் பலம் அதிகம் கொண்டு எறிகணை
சூழ நின்று போர் முனை யாதினிலும்
ராணுவம் முன்நகர்ந்து
வென்றிடும் தாகம் கொண்ட வீரமும் கண்டதுண்டு ..
எல்லைகள் வெல்லும் நோக்கில்
இரு பெரும் சூரியர்கள்
சமர்களம் சாம்பல் ஆக
சன்னதம் வன்னி மண்ணில்…..
போரியல் இயந்திரத்தின்
பொறிமுறை மாறியது
சுழவும் சிங்களத்தின்
கையைதும் ஓங்கியது
மரணத்தை அணைத்து
மானத்தை காக்க
மறுபுறம் மீண்டும்
முன்நோக்கி நகர்வு
முடிவினை விளங்கா
களமது தன்னில்
அடிமேல் அடித்தால்
ஆளணி நகரும்
சிங்களம் அடித்தது
சிதைந்தது களமுனை
வெங்களம் யாவும்
குடலும் குருதியும்
நகர்வினை ராணுவம்
நகர்த்திய வேளையில்
ஊழ் வினை நம்மை
துரத்திட கண்டோம்
எடுத்ததை எடுத்து
எட்டியே ஓடினோம்
அடித்தது மறுபடி
எடுத்ததும் எறிந்தோம்
வரும்ஒரு குண்டில்
வரலாறு அழியும்
புதையுறு குழியில்
பூக்களும் புதையும்
உயிரது மட்டுமே
உடமையாய் ஆனது
உணர்வுகள் கூட
அடிமையாய் போனது
விடியல் எமக்கு
தூரமாய் போனது
முடியும் என்பதே
முடிவென ஆனது
உயிரினை காக்க
வெட்டிய குழியில்
உறவினை போட்டு
எட்டியே நகர்ந்தோம்
சுற்றியே நின்று
சுழன்றதுபோரும்
பற்றிய தீயால்
வெந்தது தேகம்
முற்றிலும் அழிந்து
முடிவொன்று வரும் என
எண்ணிய மனதுடன்
ஏங்கியே இருந்தோம்
முடிந்தது முடிவு
மகிந்தவின் கையில்
விடிந்தது வசந்தமாய்
தெரிந்தது எமக்கு
அடிமையின் கையில்
படிந்தது விலங்கு
காட்டினை வெட்டி
கரைகளில் விட்டு
கொட்டிலை போட்டு
குவித்தது எம்மை
கொளுத்தும் வெயிலில்
கொட்டி எமை விட்டு
குதித்தது சிங்களம்
கொழுத்த வெற்றியை
கொண்டாடி மகிழ்ந்தது
பெற்றிடும் உணவு
ஒருவர்க்கே போதும்
தொற்றிடும் நோயால்
துவண்டது தேகம்
கனவதை தொலைத்து
கவலையில் நின்றாலும்
காட்டி கொடுப்புக்கு
குறையதும் இல்லை
முள்கம்பி வேலியும்
முடிவினை எட்ட
விட்ட இடங்களில்
கொட்டில்கள் போட்டோம்
முந்திய வாழ்வு கிட்டவாய்
இருப்பினும் முக்கினுள்
நுழைவது அடிமையின் காற்றே… …..
- கவிபுயல் சரண்.