விபச்சார பெண்ணே… கலங்காதே…!!!
ஓ பெண்ணே
சந்தர்ப்பங்கள் உன்னை
விபச்சாரி ஆக்கியிருக்கலாம்
சமுதாயம் உனக்கு
விபச்சார பட்டம் சூட்டியிருக்கலாம்
உன்னை தவறென்று
சொல்லவும்
நாம் தூய்மையானவர்கள்
என்று வாதிடவும்
இந்த பூமியில் எவருக்கும்
அருகதை இல்லை
கலங்காதே பெண்ணே
அந்த நாட்கள்
அழகிய மாலையில்
அந்திநேர சூரியன்
மறையும் நிமிடங்களை
உணராமல்
மறைந்து மறுநாள் விடியும்
உலகின் அழகினை
ரசித்துவிடு
அமைதியான கடலுக்குள்
பூகம்பம் மறைந்து இருக்க
வெண்மணல் பரப்பில்
விளையாடி வினைகளை
தொடரும் இந்த மனிதம்
குற்றங்கள் சொல்லாமல்
விலகிச்செல்வதே இல்லை
உன்னத உறவுகளின்
கபடங்களின் சூழ்ச்சிகளில்
சிக்கிய நீ விபச்சாரி
ஆகியிருக்கலாம்
உறவு பூண்ட உன்னதமானவர்களே
உன்னை விபச்சாரி என்று
வெளியுலகுக்கு கூறிச்செல்லாம்
கலங்காதே பெண்ணே
நீ அடிமையில்லை
உன் சிறகை வான்வெளியில்
அகலமாக பரப்பிச் செல்
இயற்கையின் தாய்மனம்
உன்னை தன மகளாக
ஏற்றுக்கொள்ளும்
வார்த்தைகளால் கீறிட்டு
காட்டி விபச்சாரி என்று
கூறிடும் உன் உறவுகளை
உன் அருகில் வைத்துக்கொள்ளாதே
கண்ணுக்கு தெரிந்த எதிரியிலும்
கண்ணுக்கு தெரியாத துரோகி
ஆபத்தானவன்
உன்னை நம்பவைத்து
உறவுகொள்ள காதல் வலைவீசும்
கயவர்களுக்கு சொல்லிவை
காமம் தாண்டிய பெண்மை
இவளென்று
உன்னை நேசிக்க
உனக்காக வாழ
உன் மனம் மட்டும் போதும்
அன்பு என்ற மாயவலைக்குள்
சிக்கிக்கொள்ளாதே
காதல்வலைவீசும் காம அரக்கர்கள்
ஆசை வலைவீசி அதில்
மீனுண்டு தரையில் வீசிச்செல்லும்
குணம்படைத்தவர்கள்
பெண்ணே இதுவரை நீ எப்படி
இருந்தாய் என்று கவலைப்படாதே
இனி எப்படி உன் வாழ்வை
சாதனை பெண்ணாக
மாற்றியமைக்கப்போகின்றாய்
அதற்காக உன் வேள்விகளை
தொடுத்துவிடு
யார்கண்டார்கள் நீயும் நாளை
அன்னை தெரேசாவாகலாம்
இல்லையேல் வீரநாச்சியாகலாம்
எம் விதிகளை நாம் எழுதிடும்
போதில்தான் சாதனை கதவுகள் திறக்கின்றது
– காவியா