உலகத்திற்கே பயன்படும் வகையில் புதிய அறிவியல் சாதனங்களை கண்டுபிடியுங்கள் என மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் இளம் விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகியவற்றின் சார்பில் வருகிற 16-ந்திகதி சர்வதேச அறிவியல் விழா நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அறிவியல் விழாவை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-
வரும், 2022க்குள், நம் நாட்டில், அனைவரும் நல்ல நிலைக்கு முன்னேற வேண்டும் என்பதே, பிரதமர் மோடியின் கனவு. அவரின் கனவை நனவாக்குவதன் முன்னோடியாக, மூன்றாவது ஆண்டாக, இந்திய சர்வதேச அறிவியல் கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சி நடத்துவதற்கு முன், உலக பட்டியலில் இடம் பெறாமல் இருந்த, இந்திய கல்வி நிறுவனங்கள், முதல் 100 மற்றும் 75 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த இரு ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளன. அந்த அளவுக்கு முன்னேற்றம் உள்ளது.
அறிவியல் பல பெரிய வழிகளில் நமக்கு உதவி செய்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி நானோ தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறந்து விளங்குகிறது. அறிவியல் ஆய்வு தொடர்பாக, அமெரிக்கா, ஜப்பான், கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது.
உலக நாடுகள் தயாரித்த பல செயற்கைகோள்களை இஸ்ரோ நிறுவனம் ராக்கெட் மூலம் அனுப்புகிறது. அந்த அளவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் உயர்ந்துள்ளனர். இந்தியா இளைஞர்களை கொண்ட நாடு. இளைஞர்கள், படித்துக்கொண்டிருக்கிற மாணவர்கள் என அனைவரும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.
இந்த விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் என நிறையபேர் கலந்துகொண்டுள்ளனர். விழா முடியும் வரை இன்னும் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிவியல் தொழில்நுட்பம் சம்பந்தமாக சந்தேகங்களை போக்கிக்கொள்ள இது அரிய வாய்ப்பாக அமையும்.
இளம் விஞ்ஞானிகளுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் புதிய அறிவியல் சாதனங்களை கண்டுபிடியுங்கள். அது இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே பயன்படும் வகையில் இருக்கட்டும். அதாவது ஏழைகள் உள்பட அனைவரும் பயனடையும் வகையில் இருக்கவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.