கர்நாடகா பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர்களின் உருவப்படத்தை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் வெளியிட்டனர்.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரும் காவல் துறை ஐ.ஜி.யுமான பி.கே.சிங், “இரண்டு சந்தேக நபர்களின் மூன்று உருவ மாதிரிகளை வெளியிட்டிருக்கிறோம். நேரடி சாட்சியங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகளுக்கு 23-ல் இருந்து 25 வயதே இருக்கும். சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அவர்கள் அங்கு வந்து தங்கியிருந்தனர். கவுரியின் வீட்டை அவர்கள் நோட்டம் விட்டுள்ளனர்.
சிசிடிவி பதிவில் சந்தேக நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்துள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள உருவப்படத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் குறித்து துப்பு தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்றார்.
‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 6-ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் இந்துத்துவ அமைப்புகள் கௌரி லங்கேஷ் மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்தன.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட போலி என்கவுன்ட்டர்கள் குறித்து ராணா அய்யூப் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’ நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார்.
அச்சமின்றி இடைவிடாது பத்திரிகைப் பணியில் இயங்கிக் கொண்டிருந்த கௌரி லங்கேஷை அவரது வீட்டு வாசலில் நான்கு மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.