தெற்கு சூடானில் மக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட பாடுபடும் இந்திய அமைதிப் படையைச் சேர்ந்த 50 வீரர்களுக்கு விருதுகள் வழங்கி ஐ.நா. சிறப்பித்துள்ளது.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் தெற்கு சூடானில், மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. அமைதிப்படையில் இந்திய வீரர்களும் பணியாற்றுகின்றனர். அவர்கள் நாட்டில் அமைதியை நிலைநாட்ட மிகவும் பாடுபட்டுவருகின்றனர். அவர்களை பாராட்டும் வகையில் ஐ.நா. விருதுகள் வழங்கியுள்ளது.
யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ். படையின் தளபதி பிராங் முஷ்யோ காமன்சி தெற்கு சூடானின் ஜோங்கிலே பகுதியில் சிறப்பாக பாதுகாப்பு கொடுத்த இந்திய படையைச் சேர்ந்த 50 வீரர்களுக்கு விருதுகள் வழங்கினார். அவர்கள் அப்பகுதியில் உள்ள 2,500 மக்களை பாதுகாக்க முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். வீரத்துடனும், தைரியத்துடனும் பணியாற்றிய இந்திய படைக்கு தனது நன்றிகளை தெரிவித்தார் .
தெற்கு சூடானிற்கான இந்திய தூதர் ஸ்ரீகுமார் மேனன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ‘இந்திய வீரர்களுக்கு நன்றியை தெரிவித்தார். மேலும் இந்திய படைகள் ஐ.நா.வுடன் இணைந்து உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது’ என அவர் கூறினார்.
மேலும், ஜோங்கிலே பகுதியின் கவர்னரான டாக்டர் அகோட் அலியர் பேசுகையில், ‘எங்கள் பகுதியில் அமைதியை நிலைநாட்டியதில் இந்தியப்படைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இங்குள்ள மக்கள் மற்றும் விவசாயிகளின் கால்நடைகளுக்கு மருத்துவ உதவி செய்தனர். ஐ.நா.வுடன் இணைந்து அமைதியை பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்’ என அவர் கூறினார்.