அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியல் கைதிகள் தொடர்பாக அதிகம் போராடி வருகின்ற, அதிகம் பேசி வருகின்ற, அதிகளவு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளரும், அங்கிலிக்கன் மதகுருவுமாகிய பாஃதர் சக்திவேல் மேற்படிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தற்பொழுது தமிழ் அரங்கிலுள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளை விடவும் மிகவும் தெளிவாகவும், செறிவாகவும், அறிவு பூர்வமாகவும் அவர் உரையாற்றினார்.
அரசியற் கைதிகளுக்கு பொது மன்னிப்போ புனர்வாழ்வோ வேண்டாம் என்று அவர் சொன்னார். “பொது மன்னிப்பைக் கேட்டால் அரசியற்கைதிகள் மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளப்படும். தமிழ் மக்களின் அரசியலை பயங்கரவாதமாகப் பார்க்கும் ஒரு சட்டத்தின் கீழ் கைதிகளாக்கப்பட்டிருக்கும் நபர்களின்;; விடயத்தில் மன்னிப்பைக் கேட்டால் அந்த அரசியலை நாங்களே பயங்கரவாதம் என்று ஏற்றுக்கொண்டதாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மற்றது புனர்வாழ்வு. அது ஒரு தண்டனையா இல்லையா? என்பதே கேள்விக்குறியாய் உள்ளது. தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பலரும் மீளவும் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியென்றால் புனர்வாழ்வு ஒரு தண்டனையில்லை என்று தானே பொருள்? வவுனியாவில் ஏற்கெனவே புனர்வாழ்வு வழங்கப்பட்ட ஒரு முன்னாள் இயக்கத்தவருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிபதி அத்தீர்ப்பை வழங்குவதற்காக தான் கவலைப்படுவதாகத் தெரிவித்தார். இப்பொழுது உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் ஒருவரும் புனர்வாழ்வின் பின் கைது செய்யப்பட்டவர்தான்”. என்ற தொனிப்பட பாஃதர் சக்திவேல் உரையாற்றினார்
அக் கூட்டத்திற்கு அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் பிரதானிகள் யாரும் அங்கே வந்திருக்கவில்லை. அக்கூட்டத்தில் எந்தவொரு கட்சியையோ அல்லது தலைவரையோ விமர்சிக்க வேண்டாம் என்றும் கைதிகளின் விடுதலையின் மீதே கவனத்தை குவிக்குமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டிருந்தார்கள். அழைப்பிதழிலும் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அங்கு பேசிய பலரும் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார்கள். அரச தரப்பு அலுவலகங்களை முடக்குவதற்கு முன் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளின் வீடுகளை முடக்க வேண்டும் என்றும் அவர்கள் தமது தேர்தல் தொகுதிகளில் நடமாடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சிலர் ஆவேசமாகக் கதைத்தார்கள். கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கடந்த கிழமை முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடாத்தி அதன் உச்சக்கட்டமாக வெள்ளிக்கிழமை ஒரு கடையடைப்பை ஏற்பாடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி திங்கள் கவனயீர்ப்பு, புதன் கிழமை ஆலயங்களில் வழிபாடு, வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி, வெள்ளிக்கிழமை கடையடைப்பு, சனிக்கிழமை அரசுத்தலைவரின் வருகையை எதிர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சந்திப்பில் மாணவர்கள் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குபடுத்துவதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிய வருகிறது. ஆனால் புதன்கிழமையளவில் அவர்கள் தமது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தெரியவருகிறது. மாணவர்கள் களத்தில் இறங்கினால் அது உச்சக்கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும். ஆனால் அடுத்த நாள் கடையடைப்பு என்பதால் எங்களுடைய போராட்டம் உச்சக்கட்டமாக இருக்காது என்ற தொனிப்படக் பதில் கூறப்பட்டதாம். அப்படியென்றால் நீங்கள் உச்சக்கட்டப் பொறுப்பை ஏற்கத் தயாரா? என்று கேட்கப்பட்டபோது அவர்களிடம் பதில் இருக்கவில்லையாம். முடிவில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடக்கவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை கடையடைப்பு வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கூட்டம், அதில் பேசப்பட்ட விபரங்கள் அதன் பின் கடந்த கிழமை முழுவதும் நடந்த போராட்டங்கள் நடக்காத போராட்டங்கள் போன்ற எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது பின்வரும் முடிவுகளுக்கு வரக்கூடியதாகவுள்ளது. முதலாவது 2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் ஒரு புதிய வடிவத்தை அடையவேண்டியிருக்கிறது. இரண்டாவது கைதிகளின் விடயமும் உட்பட தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கும் எல்லா விடயங்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஓர் ஒட்டுமொத்த பிரச்சினையின் வெவ்வேறு கூர் முனைகளே அவை. எனவே அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஓர் ஒட்டுமொத்த அரசியற் தரிசனம் வேண்டும். அப்படியொரு தரிசனம் யாரிடம் உண்டோ அந்தத் தலைமை அல்லது கட்சி அல்லது அமைப்பானது அரசாங்கத்தோடு ஓர் அரசியல் உடன்படிக்கையைச் செய்ய வேண்டும். அவ்வாறான ஓர் உடன்படிக்கையின் மூலம்தான் கைதிகளை விடுதலை செய்யலாம்.
முதலில் போராட்ட வடிவத்தைப் பற்றிப் பார்க்கலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சந்திப்பில் பேசிய பலரும் இதைச் சுட்டிக்காட்டினார்கள். வழமையான போராட்டங்களான கவனயீர்ப்பு, கடையடைப்புப் போன்றன தாக்கம் குறைந்தவைகளாகி விட்டன. அரசாங்கத்திற்கு நோகக் கூடிய அறவழிப்போராட்டங்கள் அல்லது அனைத்துலக சமூகத்தை அதிர்ச்சியோடு திரும்பிப்பார்க்க வைக்கும் அறவழிப் போராட்டங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தேவையை அச்சந்திப்பில் உணர முடிந்தது. கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் பெரும்பாலானவை வழமையானவை. அவை சிறுதிரள் போராட்ட வடிவங்கள். அடுத்த நாள் பத்திரிகைச் செய்திகளாக வருவதற்குமப்பால் அவை எவ்வளவு தூரத்திற்கு அரசாங்கத்தின் கவனத்தையும், அனைத்துலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன? என்பது தொடர்பில் ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு அவசியம். இப்பொழுது முற்றிலும் புதிதான படைப்பாற்றல் மிக்க கவனயீர்ப்புப் போராட்ட வடிவங்களை கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
உதாரணமாக இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பெண்கள் தமது ஆடைகளை ஒரு கொடியில் தொங்கவிட்டு காட்சிப்படுத்தும் ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தியதை இங்கு சுட்டிக்காட்டாலாம். இது பல ஆண்டுகளிற்கு முன் நடந்தது. இதைப் போலவே ஆளில்லா விமானங்களின் எல்லை கடந்த தாக்குதல்களை எதிர்க்கும் ஓர் அமெரிக்க அமைப்பு படைப்புத் திறன் மிக்க அறவழிப்போராட்ட அமைப்பு என்றே தனக்குப் பெயரிட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆளில்லா விமானங்களை இயக்கும் கட்டளைப் பீடங்களின் முட்கம்பி வேலிகளை அறுத்துக் கொண்டு உள்நுழைந்து போராடி வருகின்றது இந்த அமைப்பு.
இவை சில உதாரணங்கள். ஈழத்தமிழர்கள் தமது கள நிலவரங்களுக்கு ஏற்ப புதிய அதிக பட்ச கவனத்தை ஈர்க்கும் போராட்ட வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முழுநேரச் செயற்பாட்டாளர்கள் வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் கச்சேரியை முடக்குவது, ஆளுநர் அலுவலகத்தை முடக்குவது, கண்டி வீதியை முடக்குவது போன்ற போராட்ட வடிவங்கள் பற்றி பேசப்பட்டது. அப்படிப் போராடுமிடத்து சில வேளை கைது செய்யப்படவும், சிறையில் அடைக்கப்படவும் வாய்ப்புக்கள் உண்டு எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த எட்டாண்டுகளாக அறவழியில் போராடியதற்காக சிறையை நிரப்பிய தலைவர்கள் அல்லது தொண்டர்களின் தொகை மிகவும் குறைவானது. ராஜபக்~ அரசாங்கம் போராடிய சில பல்கலைக்கழக மாணவர்களைப் புனர்வாழ்விற்கு அனுப்பியதை இங்கு சுட்டிக்காட்டலாம். கடந்த வெள்ளிக்கிழமை கடையடைப்பின் போது யாழ் நகரில் பவள் கவச வாகனங்கள் ரோந்து போனதை இங்கு சுட்டிக்காட்டலாம். ஓர் இனப்படுகொலையின் கூட்டுக் காயங்களும், கூட்டு மனவடுக்களும் ஆறாதிருக்கும் ஓர் உளவியற் சூழலுக்குள் சிறைகளை நிரப்பும் ஒரு போராட்ட மரபு இன்னமும் மேலெழவில்லை. இவ்வாறானதோர் வெற்றிடத்தில் தான் திரும்பத்திரும்ப அதே பழைய போராட்ட வடிவங்களைக் கையில் எடுக்க வேண்டியிருக்கிறது. இது முதலாவது.
இரண்டாவது ஓர் அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பது பற்றியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் பேசிய பலரும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார்கள். இப்பொழுது உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டால் மட்டும்தான் உடனடித்தீர்வு சாத்தியம் என்பதே அது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அவ்வாறு செய்யவில்லை என்பதால் தான் அவர்களுடைய வீடுகளை முற்றுகையிட வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது. அக்கூட்டத்தில் உரையாற்றிய பாதஃர் சக்திவேல் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சம்பந்தரிடம் ஓகஸ்ற் 18ஆம் திகதி அவர் ஓர் ஆவணத்தை வழங்கியிருக்கிறார். அதில்; பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அரசியல்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி இது வரையிலும் சேகரிக்கப்படாத பல புதிய தகவல்கள்; தொகுக்கப்பட்டுள்ளதாம். 39 கைதிகளைப் பற்றிய அந்த ஆவணத்திற்கு இன்று வரையிலும் சம்பந்தரிடமிருந்து பதில் வரவில்லையாம். குறைந்த பட்சம் அப்படியொரு ஆவணம் கிடைத்தது என்பதற்குரிய பதில் கூட வரவில்லையாம்.
கடந்த கிழமை பாஃதரோடு பேசிய அமைச்சர் மனோகணேசன் கைதிகளின் விடயத்தில் பழியை சம்பந்தர், சுமந்திரன் மீதே சுமத்தினாராம். ஓர் அமைச்சராகவும், அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராகவும் இருந்து கொண்டு இது விடயத்தில் தான் போராடிய அளவிற்குக் கூட சம்பந்தரும், சுமந்திரனும் போராடவில்லை என்று மனோகணேசன் குறை கூறியுள்ளார். ஓர் எதிர்க்கட்சியாக பொருத்தமான எதிர்ப்பைக் காட்டி போதியளவு அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தால் இப்படியொரு நிலமை வந்திருக்காது என்ற தொனிப்படவும் மனோகணேசன் கதைத்திருக்கிறார். அண்மை மாதங்களாக சம்பந்தரையும், சுமந்திரனையும் மனோகணேசன் கடுமையாக குற்றஞ்சாட்டி வருவதை இங்கு கவனிக்க வேண்டும். அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்து கொண்டு தன்னால் முடியாத ஒன்றை எதிர்க்கட்சியாக இருக்கும் கூட்டமைப்பு ஏன் செய்யமுடியவில்லை என்று அவர் கேள்வி கேட்கிறார். ஆனால் இங்கு மனோகணேசனைப் பார்த்துக் கேட்க வேண்டிய ஒரு கேள்வி உண்டு. ராஜபக்ஸக்களின் காலத்தில் மனித உரிமைகளுக்காக வீதியில் இறங்கி வீரமாகப் போராடியவர் அவர். அதனாலேயே ஆபத்துக்குள்ளாகி சிறிது காலம் வெளிநாட்டில் வசித்துமிருக்கிறார். ஆனால் இப்பொழுது ஓர் அமைச்சராக மாறியபின் அவரும் முன்னாள் போராளியாகி விட்டார். தனக்கு சரியெனப்பட்ட ஒன்றிற்காக அவர் அரசாங்கத்தை பயன்பொருத்தமான விதத்தில் ஏன் எதிர்க்கவில்லை? என்ற கேள்வியை இங்கு கேட்க வேண்டும்.
மனோகணேசன் மட்டுமல்ல கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பேசிய பலரும் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த போராட்டத்தில் குரல் எழுப்பிய ஒரு பகுதியினரும் சம்பந்தரை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். கைதிகளின் விடயத்தில் ஓர் அரசியல் உடன்படிக்கையை செய்யத் தவறியதற்கு சம்பந்தர் தானே பொறுப்பு? பல மாதங்களுக்கு முன்பு சில விடுதலையான அரசியல்க் கைதிகள் சம்பந்தரை சந்திக்கச் சென்றிருந்தார்கள். அப்பொழுது சம்பந்தர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார். பத்திரிகை மீதான தனது பார்வையை திருப்பாமலேயே அவர் தன்னைச் சந்திக்க வந்தவர்களோடு உரையாடினார். அதன் போது “திறப்பு என்னிடமில்லை” என்று கூறினார்.
கைதிகளின் விவகாரம் ஒரு சட்ட விவகாரமல்ல. அது ஓர் அரசியல் விவகாரம். அதை சட்ட ரீதியாக மட்டும் அணுக முடியாது. அதிகாரம் பொருந்திய சட்டமா அதிபரும் பயங்கரவாதத் தடைச்சட்டமும், இனச்சாய்வுடைய நீதிபரிபாலனக் கட்டமைப்பும், திடசித்தமில்லாத அரசியல்த் தலைவர்களும் உள்ளவரை கைதிகளின் விவகாரத்தை ஒரு சட்ட விவகாரமாகக் கையாளவே முடியாது. சட்டத்தரணிகளைத் தலைவர்களாக தெரிந்தெடுக்கும் ஒரு சமூகம் இது போன்ற விடயங்களில் சட்டத்தரணிகள் தீர்வை வாங்கித்தருவார்கள் என்று காத்திருந்தால் எதுவும் நடக்கப்போவதில்லை. இவை மாட்டுத்தலையை பண்றித்தலையாக மாற்றியது போன்ற வழக்குகளல்ல. இவை முழுக்க முழுக்க அரசியல் தீர்மானங்களின் பாற்பட்டவை. அவ்வாறான தீர்மானங்களை எடுக்கவல்ல அரசியற்திடசித்தம் கொண்ட தலைவர்கள் எவரும் ரணில் – மைத்திரி அரசாங்கத்தில் கிடையாது.
அதே சமயம் இதை ஓர் அரசியல் விவகாரமாக விளங்கி அதற்கேயான அரசியல் பரிமாணத்தோடு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு தமிழ்த் தலைவர்களாக இருக்கும் சட்டத்தரணிகளாலும் முடியாது. ஓர் அரசியல் விவகாரத்தைப் பொறுத்தவரை ஓர் அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டும். ஓர் அரசியல் தீர்மானத்தை எடுப்பதென்றால் இது போன்ற விடயங்களில் ஓர் அரசியல் உடன்படிக்கை செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஓர் உடன்படிக்கை செய்யப்படுவதென்றால் அரசியல் வலுச்சமநிலை மாற்றப்பட வேண்டும். மாற்றப்படும் ஒரு புதிய வலுச்சமநிலையின் மீதே ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுதலாம்.
அப்படியொரு வலுச்சமநிலை மாற்றம் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது ஏற்பட்டது. ஆனால் சம்பந்தர் அதைத் தீர்க்கதரிசனத்தோடு கையாளத் தவறி விட்டார். திறப்பைக் கையிலெடுக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் அது. ஆனால் அவர் பூட்டை வைத்திருந்த தரப்பிடமே திறப்பையும் கொடுத்து விட்டார். இப்பொழுது அரசுத்தலைவருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். சம்பந்தர் சில நாட்களுக்கு முன் கைதிகள் தொடர்பில் அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். கைதிகளின் விவகாரம் ஒரு சட்ட விவகாரமல்ல என்ற தொனி அதிலுண்டு எனினும், ஒடுக்கப்படும் ஒரு மக்கள்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒருவர் எழுதும் கடிதத்தைப் போல அது இருக்கவில்லை.
எனவே கைதிகளின் விடயத்திலும், ஏனைய போராட்டங்கள் தொடர்பிலும் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனம் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறான ஓர் ஒட்டுமொத்தத் தரிசனம் இல்லையென்றால் அரசாங்கத்தோடு ஓர் உடன்படிக்கைக்குப் போக முடியாது. ஒரு சட்ட விவகாரமாக அணுகி அதைத் தீர்க்கவும் முடியாது. கைதிகளின் விவகாரம் எனப்படுவது ஓர் உதிரி விவகாரமல்ல. காணிப்பிரச்சினை போல காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை போல முன்னாள் இயக்கத்தவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் போல ஓர் ஒட்டுமொத்தப் பிரச்சினையின் வெவ்வேறு பகுதிகளில் அதுவும் ஒன்று. எனவே இது விடயத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தரிசனம் இருந்தால் தான் அதற்கமைய ஓர் அரசியல் உடன்படிக்கையை எழுத முடியும். ஆனால் அவ்வாறான ஓர் உடன்படிக்கை எழுதப்படாத ஒரு வெற்றிடத்தில்தான் காணிக்காக மக்கள் போராடுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடுகிறார்கள். அரசியல் கைதிகளுக்காக போராடுகிறார்கள். புனர்வாழ்வு பெற்றவர்கள் மறுபடியும் தண்டிக்கப்படுகிறார்கள், ஒரு புதிய யாப்பும் எழுதப்பட்டு வருகிறது. பூட்டை வைத்திருப்பவரிடமே திறப்பையும் கொடுத்து விட்டு இப்பொழுது கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறோமா?