டெல்லியில் உள்ள இல்லத்தில் விவசாயிகளிடையே பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, விவசாயிகள் பிரச்சினையில் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பேசினார்.
டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது. அங்கு அவரை சந்தித்து பேசுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்தனர். வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில் விவசாயிகளுடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
இந்தியா இப்போதும் விவசாய நாடாகவே திகழ்ந்து வருகிறது. ஆனாலும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின் இணைப்பு இல்லாமல் உள்ளன.
முறையற்ற பருவ மாற்றத்தின் காரணமாக விவசாயம் லாபகரமற்ற தொழிலாக மாறிவிட்டது. இதனால் விவசாய மக்கள் விவசாயத்தை விட்டு விலகிச் செல்வது அதிகரித்து வருகிறது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மோசமான சாலைகள், மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் ஊடகங்கள் கிராமங்களையும், அங்கு விவசாயிகள் படும் அல்லல்களையும் கண்டுகொள்வதில்லை.
அதேபோல் அரசியல்வாதிகளும், பாராளுமன்றமும் விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பாராளுமன்றம், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகிய 3 தரப்புகளும் விவசாயிகளின் நலன்களில் அக்கறை செலுத்த வேண்டும்.
மேல்சபை தலைவர் என்கிற ரீதியில், பாராளுமன்றத்தில் விவசாய பிரச்சினைகள் குறித்து பேச உறுப்பினர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிப்பேன். விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக எந்த மன்றத்துக்கும் போக நான் தயார். அவர்களுக்காக எப்போதும் நான் முன்வந்து நிற்பேன்.
மத்திய, மாநில அரசுகள் இரண்டும் விவசாயத்தில் முதலீடு செய்வதை அதிகப்படுத்த வேண்டும். இதற்கான அமைப்பு முறைகள் மற்றும் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள், மந்திரிகள், வேளாண் பல்கலைக்கழகங்கள், இந்திய வேளாண் ஆய்வுக்குழு, விவசாயம் சார்ந்த பிற ஆய்வு அமைப்புகள், விஞ்ஞானிகள் என அனைத்து தரப்பினரும் விவசாயிகளின் நலனுக்காக பாடுபட வேண்டும்.
பசுமை புரட்சி மற்றும் பல்வேறு வளர்ச்சி காரணிகள் இருந்த போதிலும் விவசாயிகளின் வருவாய் உயரவில்லை. இதனால் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட முன்வந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தன்னை காண வந்த விவசாயிகளுக்கு வெங்கையா நாயுடு நன்றி தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘விவசாயிகள் என்னை ஆசிர்வதிப்பதற்காக வந்ததை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இல்லத்துக்கு வெளியுறவு தூதர்கள், மந்திரிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால் விவசாயிகளின் வருகைதான் என்னை, எனது பழைய நினைவுகளை அசைபோட வைத்தது. எனது எண்ணங்கள் எல்லாம் இப்போதும் கிராமங்களில்தான் உள்ளது’’ என கூறினார்.