மீண்டும் கண்ணீர்ச் சுரப்பியை அணிந்து கொள்கிறேன்
ஆறு ஆண்டுகளுக்கு முன்
இதே நாட்களில்
நான் பிணங்களை
புதைத்துக்கொண்டிருந்தேன்,
பதுங்கு குழிகளோடு
பிணைக்கப்பட்டிருந்தேன்,
இனத்தின் விடிவை
எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்
ஆம் இதே நாட்களில்
ஒரு குப்பைத்தொட்டி
உணவேனும்
கிடைக்குமா என்று
ஏங்கிக்கொண்டிருந்தேன்,
நாளைய விடியல்
என் வீட்டில் விடியாதா
என்றும்
ஏங்கிக்கொண்டிருந்தேன்
இதற்கு முந்தய
இரு நாட்களில்
சன்னம் கிழித்து
மரணம் வரை சென்று மீண்ட
தாயை
மடியில் கிடத்தி
கதறிக்கொண்டிருந்தேன்,
என் வளர்ப்பு நாயும் அழுதது
அது வலியின்
உச்ச கட்டம்
மறுநாள் நண்பன்
இறந்ததற்காய்
அழுதுகொண்டிருந்தேன்,
மறுநாள் மைத்துனன்
வீரமரணம் கேட்டு
கதறிக்கொண்டிருந்தேன்,
அதே இரவு
எதிர்த்த வீட்டில் வீழ்ந்த குண்டில்
ஈர் ஆறு உயிர்கள்
துண்டமாக்கப்பட்டனர்
துண்டாடப்பட்ட தலையை
தூக்கி உடலுடன்
சேர்த்து வைத்தபோது
என் கண்ணீர்ச் சுரப்பிகளையும்
கழற்றி வைத்துவிட்டேன்
ஒரு மரத்தடியில் நின்று
மயானத்தை
பார்த்துக்கொண்டிருந்தேன்
என்னை நோக்கி வந்த
சன்னம் எனக்கு நேர் எதிரில்
இரண்டு அடியில்
ஒரு கொடிக்காக ஊன்றப்பட்ட
பனை மட்டையில்
பட்டு தெறித்தபோது
உணர்தேன்
எனக்கான கடவுள்
இருக்கின்றார்
ஒருவேளை இறந்தவர்களுடைய
கடவுளர்களெல்லாம்
உறக்கத்தில்
இருந்திருக்கவேண்டும்
எப்படி எழுதுவது
எதை எழுதுவது
எந்த சொல் எடுத்தாலும்
பிணம் ,ஓலம் ,அவலம்
என்றே கூவி மடிகிறது
பாரதப்போரில்
ரணபூமியைத் தேடி
மனிதர்கள் சென்றதுண்டு
இங்கு மனிதர்களைத்தேடி
ரணபூமிகள் நகர்வது
வழக்கமாயிற்று
இறுதி மூச்சுவரை
போராடவேண்டும்
என்பதற்கு
எங்களைவிட சாட்சி
வேறென்ன இருக்கமுடியும்
நாம் எதிர்த்து அடிக்க அடிக்க
எத்தனை நாடுகள்
கைகொடுத்தன
அந்த ஈனச் சிங்களனுக்கு
போகட்டும்
போராட்டம்
ஒருபோதும் பொய்த்துப்
போவதில்லை
விதைகள் முளைக்கும்
விருட்சமாகும்
ஆம் அந்த விருட்சம்
அழிக்க முடியாத
இறைவிருட்சமாகும்
– அனாதியன்