இவ்வருட தீபாவளி நிகழ்வை விட வும் அடுத்த வருட தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில், மகிழ்ச்சியுடன் கூடிய வகையில் நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ஆம் நாள் அலரி மாளிகையில் நடைபெற்ற தீபாவளிப் பண்டிகை வாழ்த்துச் செய்தியில், 2017ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியுள்ளது. அடுத்த தீபாவளித் திருநாளுக்கு முன்னர் இந்த வெளிச்சம் நிரந்தரமாக அமையும் எனத் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், நல்லாட்சி அரசாங்கமானது, இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர். இது புனித பயணமாகும். இந்த பயணத்தில் அவர்கள் இருவரும் வெற்றி காண வேண்டும். அதற்காக நாம் நூறு வீதம் ஆதரவு வழங்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிளவுபடாத, பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து இனத்தவர்களும் சமஉரிமையுடன் வாழும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய தீபாவளி விழா நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த தீபாவளி நிகழ்வை விடவும் அடுத்த வருடம் திபாவளி பண்டிகை மிகவும் சிறப்பான சூழலில் மகிழ்ச்சியுடன் கூடிய சூழலில் நடைபெறும். அவ்வாறு நடைபெறும் என்ற நம்பிக்கையிலேயே இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றோம்.
இதனை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் நீண்டகாலமாக எமது நாடு இருளில் இருந்தது. 2015 ஆம் ஆண்டு தை மாதம் 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த நாடு இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது புதிய பயணத்தை இந்த நாடு ஆரம்பித்துள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக, சமத்துவமாக வாழும் சூழலை உருவாக்குவதே அந்த பயணமாகும்.
இந்த நாட்டில் அவ்வாறான பயணத்தை வழிநடத்துவதற்காக ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் இங்கே அமர்ந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். நீண்ட காலம் அவர்கள் ஒற்றுமைபடாமல் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்து வாழ்ந்தவர்கள். ஆனால் இன்று ஒன்றாக இணைந்து இந்த நாட்டை புதிய பாதைக்கு இட்டு செல்வதற்காக ஒற்றுமையாக இணைந்து செயற்படுகின்றனர்.
அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன். அவர்கள் இருவரும் இந்த பயணத்தில் வெற்றியடைய வேண்டும். எமக்காக மாத்திரமல்ல. இந்த நாட்டிற்காகவும் அனைத்து மக்களுக்காகவும் வெற்றிவாகை சூடவேண்டும். அந்த பயணத்தில் வெற்றி காணும் முகமாக புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த முயற்சியிலும் நாம் வெற்றிகாண வேண்டும்.
ஒருமித்த நாட்டுக்குள் பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள் அனைத்து இனத்தவர்களும் சமத்துவமாக வாழும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான அரசியலமைப்பினை உருவாக்குவதன் மூலமாக நாங்கள் எல்லோரும் ஒரு நாட்டு மக்களாக வாழ முடியும். நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறி கொள்வதற்கு நாம் விரும்புகின்றோம். எமது மக்களும் அதனை விரும்புகின்றனர்.
அந்த பயணத்தை நோக்கியே நாம் நகர்ந்த வண்ணம் உள்ளோம். அந்த பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு நூற்றுக்கு நூறு வீதம் நாம் ஆதரவு வழங்குவோம். அதில் எந்தவொரு சந்தேகமும் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது ஒரு புனிதமான பயணமாகும்.அந்த பயணத்தில் வெற்றிக்கொள்ள வேண்டும். அந்த வெற்றியின் ஊடாக இந்த நாடு முன்னேர வேண்டும். பொருளாதார, கலாசார ரீதியாக முன்னேற வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பெளத்தர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து சுபிட்சம் அடைய வேண்டும். இந்த நாட்டின் இருள் நீங்கி வெளிச்சம் ஏற்பட வேண்டும் என பிராத்திக்கின்றேன் என்றார்