நான் சமாதானநேரம் ஈழத்துக்குச் சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் தமிழர் பிரச்சனைகளை படமாக்கவேண்டுமெனவும், அதில் எமது பிள்ளைகள் நடிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
அதற்கு நான் உங்களைப் போன்ற தியாகி இல்லை. நானொரு சுயநலவாதி. எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மணம் முடித்து வைத்துவிட்டு உங்களுடன் வந்து தங்கியிருந்து உங்களுக்கு விரும்பியதுபோல் படம் எடுத்துத் தருவதாகக் கூறினேன் என இயக்குநர் பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அவர் கேட்ட திரைப்படத்தை நான் எடுக்காவிட்டாலும், அந்தப் பிரச்சனையை வைத்து நான் ஒரு படம் தயாரிப்பேன்.
ஏனென்றால் உலகத்தில் எங்கெங்கெல்லாமோ புரட்சிகள் உருவாகின. ஆனால் ஈழத்தில் ஒரு நிராயுதபாணியான, ஒரு தனி மனிதன் ஒரு நான்கு பேரைச் சேர்த்து, நான்கை நாணூறாக்கி, நாணூறை நாலாயிரமாக்கி ஒரு பிரம்மாண்டமான போராளியாக நின்றது தலைவர்பிரபாகரன் மட்டுமே.
மேலும், இறுதிப் போர் நடைபெற்ற நேரம் அந்த மக்களுக்காக தமிழ் நாட்டிலிருந்து அழுத்தமாக குரல் கொடுக்கவில்லையெனவும், அவ்வாறு குரல் கொடுத்திருந்தால் நிச்சயமாக அவர் வென்றிருப்பார் எனத் தனது ஆதங்கத்தையும் தெரிவித்தார்.