திருகோணமலை மாவட்டத்தில் இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக சலப்பை ஆற்றில், அனுராதபுரத்திலிருந்து 650 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை குடியேற்றம் செய்துள்ளது நல்லாட்சி அரசாங்கம்.
சலப்பையாறு பிரதேசம், தமிழ்ப்பேசும் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பகுதியாகும். இங்கு யான் ஓயா திட்டம் என்ற போர்வையில், சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோமரங்கடவெல என்று சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள, குமரேசன்கடவை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, யான் ஓயாவுக்கு அருகே – கல்லப்பத்தை பிரதான வீதியை அண்டியே இந்த சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடனேயே இந்த சிங்களக் குடியேற்றத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
650இற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள், அனுராதபுர மாவட்டத்தில் இருந்து கொண்டு வந்து இங்கு குடியேற்றப்பட்டுள்ளன.
சிறிலங்கா அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளின் துணையுடன் இடம்பெற்றுள்ள இந்தக் குடியேற்றத் திட்டத்தில், நிரந்தர வீடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால், திருகோணமலை மாவட்டத்தின் இனவிகிதாசாரம் பெரிதும் மாற்றமடையும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
- thuliyam