ஆண்டுகள் பல கடந்து எம் நினைவுக் கிடங்கில் புதைக்கப்பட்ட பல நூறு உண்மைகள் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவை எங்களின் சாவுகளாக இருக்கட்டும் வலிகளாக இருக்கட்டும் சந்தோசங் களாக இருக்கட்டும் அது எது என்ற வகையற்று நினைவற்று போவது காலக்கொடுமை. இந்த வகைக்குள் நேற்று நான் அனுபவித்தது தான் இந்த “தியாகசீலம்”.
“தியாகசீலம்” என்ற சொல்லாடல் விடுதலைப் போராட்டத்தில் தினமும் பயன்பாட்டில் இருந்ததை அனைவரும் அறிவர். மாவீரர்களோடு பின்னி பிணைந்து விட்ட இச்சொல்லாடலை மூன்று சந்தர்ப்பங்களில் நாம் பயன் படுத்தி வந்தோம்.
1 : வீரச்சாவடைந்த போராளின் உடலங் களை தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) இராணுவ உடை அணிந்து சந்தனப் பேளையில் அவர்களை கிடத்தி உறவினர்களிடம் கையளிக்கும் வரை அத்தனையையும் செய்யும் இடமான “தூண்டி” என்று ஆரம்ப நாட்களில் அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பாசறையை பின்னாட்களில் புனிதத்துவம் மிக்க பெயரான ” தியாகசீலம் ” என்று உணர்வுகளில் அணைத்துக் கொண்டோம்.
2: முகம் மறைக்கப்பட்ட மறைமுக போராளிகளின் வித்துடல்களை விதைத்த போது அல்லது நடுகற்களை நட்ட போது அவற்றை தியாக சீலம் என்றே அணைத்துக் கொண்டோம். (பல இரகசிய காரணங்களுக்காகவே அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டதும், முகமறியா மறைமுகங்களாய் அவர்கள் தூங்கியதும் வெளிப்படையான உண்மை. தமிழீழ விடுதலைக்கு பின்பான காலம் அவர்களின் முகம் யார் என அடையாளப் படுத்தப் பட்டிருக்கலாம்.)
3: வீரச்சாவடைந்த மாவீரர்களின் உடலங்கள் வந்த போது பலவற்றில் அடையாளத்தகடுகள் இல்லாத நிலை இருந்தது. அது எதிரியிடம் பிடிபட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தி னூடாக வந்த போராளிகளின் உடலங்களாக இருக்கலாம் அல்லது சண்டைக்களங்களில் எம்மால் மீட்கப் பட்டாலும் கழுத்தில் இடுப்பில் கையில் என கட்டப்பட்டிருந்த மூன்று தகடுகளும் தவறி இருக்கலாம். அது எவ்வாறோ போராளிகளின் உடலங்களை எம்மால் அடையாளப்படுத்த முடியாத சந்தர்ப்ப ங்களில் படையணி அல்லது துறைசார் போராளி நண்பர்கள் அல்லது இறுதியாக எடுக்கப்பட்டிருந்த தனிநபர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த காயவிபரங்களை வைத்து அடையாளம் காண முயன்றும் அதிலும் தோல்வி களை சந்தித்து அடையாளம் காண முடியாத பல நூறு வித்துடல்களை விதைத்த போது அவர்களுக்கான பொதுப்பெயராக “தியாகசீலம்” என்ற உணர்வுமிக்க புனிதத்தை அணைத்துக் கொண்டோம்.
இவ்வாறு இவர்கள் விதைக்கப்பட்ட போது இவர்களை அடையாளம் காணும் சந்தர்ப்பம் ஓர்நாள் வரும் என்றே எம் தேசியத்தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தார். தமிழீழம் மலர்ந்த பின் தமிழீழ தேசத்தில் எம் மக்களின் DNA க்கள் பரிசோதிக்கப் படும் போது இந்த மாவீரர்களின் DNA எந்த உறவுகளோடு ஒத்துப் போகுதோ அதை வைத்து இந்த உடலம் யாருடை யது என்பதை இனங்காண முடியும் என்ற தூரநோக்க சிந்தனை அவரை ஆறுதல்படுத்தியது. அதனால் தான் இந்த தியாகசீலர்களை அவர் மாவீரர் துயிலும் இல்லங்களில் அடையாள ங்கள் அற்று விதைத்த போதும் தியாகசீலம் என்ற அடையாளத்தை கொடுத்து மனவேதனையை உள்ளுக்குள்ளே புதைத்துக் கொண்டார்.
இவ்வாறாக எங்கள் உணர்வுகளோடும் உதிரத்தோடும் ஒன்றிவிட்ட தமிழீழ தாயக மீட்பு போரில் வீரச்சாவடைந்த இந்த உன்னதமானவர்களை அடையாளப்படுத்தும் சொல்லாடலை ஒரு கட்டுரைக்காக நினைவு படுத்திய போது அதை மறந்து தவித்த மருத்துவ போராளி ஒருவர் என்னிடம் கேட்க நான் என் போராளி நண்பர்களுக்கு தகவல் அனுப்ப அவர்கள் வேறு போராளி நண்பர்களுக்கு தகவல் அனுப்ப என்று எம் நினைவுக்கிடங்கை கிளறி பார்த்து அதை உறுதிப்படுத்தி கொள்ள கிட்டத்தட்ட 25 பேருடைய நினைவகங்களை தேட வேண்டிய தேவை எழுந்தது. இது தமிழீழ தேசத்தை நேசித்த / நேசிக்கும் எமக்கு ஆரோக்கியமானதல்ல.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுத முனைகள் மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையில் இந்த புனிதமான சொல்லாடல் கூட நினைவில் இருந்து மறைந்து போய்விட்டது என்றால் எதிர்காலத்தில் எமது விடுதலைப்போராட்டம் என்று ஒன்று நடந்தது என்பதையும் எம் வீரசெம்மல்களின் உயிர் தியாகங் களையும் எம் மக்களின் வலிகளையும் எதிரியின் இனவழிப்பையும் எம்மால் எவ்வாறு நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? எம் இளைய தலைமுறைக்கு அல்லது அடுத்த தலைமுறைக்கு எம் மீது திணிக்கப்பட்டு எம்மால் எதிர்கொள்ளப்பட்ட இந்த போரின் வடுக்களை எவ்வாறு கூறப்போகிறோம்? அவர்களுக்கு எங்கள் தியாகங்களை எவ்வாறு கூறப் போகிறோம்? என எழும் பல நூறு வினாக்களுக்கு விடையில்லை.
அனைத்தையும் மீறி ஒரு பெரும் வினா எழுந்து நிற்கிறது. “நாம் அடுத்த தலை முறைக்கு எதை விட்டுச் செல்கிறோம்…?”
இந்த இடத்தில் புலம்பெயர் அமைப்பு க்கள் மற்றும் ஈழப்படைப்பாளிகளுக்கு அன்பான வேண்டுகை ஒன்றையும் விட்டுச்செல்கிறேன்.
அன்பானவர்களே…!
ஆண்டுதோறும் தங்களால் முன்னெடு க்கப்படும் “மாவீரர் நினைவேந்தல் ” நிகழ்வுகளில் தங்களால் காட்சிப் படுத்தப் படும் உணர்வுமிக்க கல்லறைகளாக இருக்கட்டும் திருவுருவப்படங்களாக இருக்கட்டும் பதாதைகளாக இருக்கட்டும் எந்த வடிவமாயினும் அந்த வடிவத்தில் “தியாகசீலம்” என்று ஒரே ஒரு பகுதியை உருவாக்கி மக்களுக்கு அது தொடர்பான தெளிவை கொடுங்கள். அடுத்த தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்தது என்பதை வரலாறாக கொடுங்கள்.
படைப்பாளிகளே:
உங்கள் படைப்புக்களை நினைவுகள் சுருங்க முதல் எழுத தொடங்குகள் வரலாறாகி விட்டவர்களின் தியாகங் களை வரலாறாக்குங்கள் அந்த தியாக சீலர்களும் என்றும் உயிர்ப்புடன் இருப்பார்கள்.
நன்றி
– விமகன்.இ