சிறிலங்காஅரசாங்கத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்pபன் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணைக் கொண்டு வந்து உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
மேலும் அவர், பயங்கரவாதத் தடைச்சட்டம் பயங்கரமானது என்பதுடன் அருவருப்பானது என சிறிலங்கா அரசாங்கமே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், அச்சட்டத்தின்கீழ் தொடர்ந்தும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதில் என்ன நியாயம் உள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு அனைத்துலக தர நியமங்களுக்கேற்ற புதிய சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. அந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பெரும்பாலானவர்கள் சாதாரண நீதிமன்றத்தினால் கூட ஏற்றுக் கொள்ளமுடியாத ஒப்புதல் வாக்குதல் மூலத்தின் அடிப்படையில் தான் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது. அதுபோல தமிழ் அரசியல் கைதிகளும் ஏன் விடுவிக்கப்படக் கூடாது? எனவும் கேள்வி எழுப்பினார்.