சிறிலங்காஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேனவின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 14ஆம் நாள் கறுப்புக்கொடிப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே;சிவாஜிலிங்கம் மைத்திரிபாலசிறிசேன சந்தித்தபின்னர் அந்நிகழ்வில் கலந்துகொண்டமைக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அனுராதபுரச் சிறைச்சாலையில் தொடர்ந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளின்கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் கடந்த 13ஆம் நாள் வடமாகாணம் எங்கும் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டதுடன் போராட்டங்களும் நடைபெற்றது.
இதனையடுத்து, 14ஆம் நாள் சிறிலங்காஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
கறுப்புக் கொடிப் போராட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்து போராடிக்கொண்டிருந்த வேளையில், மைத்திரிபால சிறிசேன வாகனத்திலிருந்து இறங்கி வந்து அவர்களைச் சந்தித்துச் சென்றார்.
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்நிகழ்வைப் புறக்கணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜிலிங்கத்தை மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடியமை ஒரு திட்டமிட்ட நாடகம் என நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.