மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சந்திப்பு தோல்வியில் முடிவடைந்ததால் அவர்களின் விடுதலைக்காக இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது வழமைபோல கால அவகாசம் கோரியதுடன் நீதி அமைச்சரும் சட்டமா அதிபரும் நாடு திரும்பியதும் அவர்களுடன் பேசிவிட்டு முடிவு சொல்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசியல் கைதிகள் தொடர்பில் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை துரிதபடுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் யாழ் பல்கலயின் அனைத்து பீடங்களினதும் மாணவ ஒன்றியங்கள் இணைந்து கால வரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு செய்வதாக தீர்மானித்துள்ளன.
ஜனாதிபதியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகளுக்குமிடையிலே நடைபெற்ற சந்திப்பில் ஐனாதிபதி 25ம் திகதி வரை கால அவகாசம் கோரிய நிலையிலேயே இவ் வகுப்பு புறக்கணிப்பு இடம்பெறுகிறது.
இதேவேளை கடந்த 16 ஆம் திகதி உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் கைதிகளின் விடுதலை தொடர்பில் நம்பிக்கையான பதில் கிடைக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ப்போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.