புதிய அரசியலமைப்புக்கு அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக, ஊடகங்கள் மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் கூட்டு காரக சங்க சபாவில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, நேற்றைய சிங்கள, ஆங்கில நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் குறித்து அதிருப்தியை வெளியிட்டார்.
புதிய அரசியலமைப்புக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பை வெளியிடாத நிலையில், அவர்களின் படங்களைப் பிரசுரித்து, ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்தவதாகவும் குற்றம்சாட்டினார்.
மல்வத்த பீடாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரது படம் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான மக்களின் ஆணையை தமது அரசாங்கம் பெற்றுள்ளதாகவும், ஊடகங்களின் அங்கீகாரம் தேவையில்லை என்றும் சிறிலங்கா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.