நேற்று ஒரு கலந்துரையாடல் தொலைபேசி வழி உரையாடலாக அமைந்தது. அதில் இன்றைய எம் மக்களின் நிலை பற்றியும் இனப்படுகொலைகள், எமது இன்றைய ஊடகங்கள் தொடர்பாகவும் இருவரும் விவாதித்தோம். அப்போது ஒரு உண்மையை நான் உணர்ந்தேன். என்பதை விட அவருக்கும் தெளிவு படுத்தினேன்.
இன்றைய புலம்பெயர் அமைப்புக்கள் சரி, ஊடகங்கள் சரி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுற கதையாக நடந்த இனவழிப்பு தொடர்பாகவும் இனியும் நாம் செல்ல வேண்டிய தொலை தூர இலக்கு தொடர்பாகவும் மீண்டும் மீண்டும் எம் மக்களுக்குள் நின்று விழிப்புணர்வு என்ற பெயரில் காலத்தை கழிக்கின்றோம்.
இதன் உண்மையை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். ஏனெனில், பிரித்தானிய நாட்டில் இருந்து இயங்கும் சில ஊடகவியலாளர்கள் தவிர்ந்த வேற்றின ஊடகவியலாளர்களை எமக்காக பேசவைக்கும் நிலைக்கு எந்த நாட்டு அமைப்புக்களோ அல்லது தமிழ் ஊடகவியலாளர்களோ தயார்ப்படுத்தவில்லை என்பது தெளிவான நியமாகிறது.
இதற்கான காரணத்தை நாம் ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஏனெனில் தனித்து நாம் எமக்காக நீதி கேட்டு வீதியில் இறங்கினால் அதை பெறுபேறற்றதாக அல்லது பேசுபொருளற்றதாக ஆக்கிவிட சிங்களமும் அதன் துணை நாடுகளும் தயாராகவே இருக்கின்றன. இதன் அடிப்படையை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இதை நான் எழுதுவதால் புலம்பெயர் அமைப்புக்கள் சார்ந்தோர் என் மீது கோவம் கொள்ளலாம். அது தவறில்லை ஏனெனில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை என்று நான் கூறவில்லை. செய்கிறார்கள். இன்றும் இதற்காக பலர் தமது பணியை திறமாக செய்கிறார்கள். ஆனால் செய்யும் செயற்பாடுகளில் வினைத்திறன் கொண்டதாக தூர இலக்கு கொண்டதாக திட்டமிட்டு சில நகர்வுகளை செய்யுங்கள் அது இன்னும் எமக்கு வேகமும் பெறுமதியும் தரும் என்றே கேட்கிறேன்.
நாங்கள் முள்ளிவாய்க்காலில் செத்துக் கொண்டிருந்த போது, எமக்காக நீங்கள் செய்தவற்றை நாம் மறக்கவில்லை. இன்றும் அதற்கான தண்டனைகளை பலர் அனுபவிப்பதும் நாம் அறிந்ததே. ஆனாலும் அதன் பின்பான செயற்பாடுகளில் வேகமும் விவேகமும் பற்றாக்குறையாக இருப்பது புலனாகிறது. தனித்து முள்ளிவாய்க்கால் நிகழ்வு ஜெனிவா முன்றலில் பேரணி என்று நின்றுவிடாது அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்துலக வேற்று மொழி ஊடகவியலாளர்களை எமக்காக பேச வையுங்கள். அதுவே எமக்கான இலக்கடைய பல கதவுகளை திறந்து விடும். இளையவர்களுக்கான ஊடக கதவுகளை திறந்து அவர்களை பல்லின மொழியில் பிரச்சனைகளை கூற வையுங்கள்.
எப்போது பல்லின மக்களிடையே எம் பிரச்சனைகள் பேசப்படுகிறதோ, அல்லது அவர்களால் எமக்கான நீதி ஐ.நா வில் கோரப்படுகிறதோ, அன்று நான் கூறியது போல பல கதவுகள் திறக்கப்பட்டு நீதி மற்றும் எமக்கான தனியுரிமை தன்னாட்சி தமிழீழ விடுதலை எம் கைகளில் பெறுமதியாக கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இதில் இன்னும் ஒரு விடயத்தை கவனியுங்கள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாய நிலை ஒன்று உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். பல அமைப்புக்கள் உருவானாலும் அத்தனையும் தமிழீழ விடுதலை என்ற உன்னத நோக்கோடு ஒரு கோட்டில் வாருங்கள். அதே போலவே ஊடகங்களும் ஒரு நிலைப்பாட்டில் பயணியுங்கள் உங்கள் ஊடக ஒளிக்கீற்றுக்களை சர்வதேச ஊடகவிலாளர்கள் மற்றும் சர்வதேச அரசியலாளர்கள் நெஞ்சத்தை தொடுமாறு அனுப்புங்கள் அப்போது தான் எம் பேச்சுக்களுக்கு அவர்கள் செவி சாய்ப்பார்கள்.
நாவலாசிரியர்கள், கவிஞர்கள் படைப்பாளிகள் பல்லின மொழியில் படைப்புக்களை வெளியிடுங்கள். அப்போது தான் பல்லின மக்கள் அவற்றை புரிந்து கொள்வார்கள்.
அதன் பின் நாம் எமக்காக பேச வேண்டியதில்லை அவர்கள் ஐ.நாவில் பேசுவார்கள். அதற்காக எம் இளையவர்களை தயார்ப்படுத்துங்கள் அவர்களை ஒவ்வொரு நாடாளும் மன்றத்தின் குரலாக ஒலிக்க கூடிய வகையில் தயார்படுத்தி செயற்படுத்துங்கள் ஒவ்வொரு நாடாளுமன்றிலும் எம் குரல் ஒலிக்கும் போது நிட்சயம் எம் குரல் தமிழீழம் கிடைத்துவிட்டது என்ற செய்தியோடு காற்றில் பரவும்…