ஆயிரம் அணுக்கள் கூடி
அலையெனஅணி வகுத்தும்
அதில் ஒன்றின் அர்பணிப்பே
அன்னையின் கரு என்றாச்சு
பிறப்பிலே தீர்க்கம் ஆகி
பிறந்ததும் தொடரும் இந்த
பிறவியில் முடியா அந்த
சொல்லினை வெல்லும் ஆற்றல்
கருவது கலையா வண்ணம்
கண்ணிமை போல காக்கும்
பெண்மையின் காவல் என்றும்
பிள்ளைக்காய் அர்ப்பணிப்பு.
வளருவாய் நித்தம் என்று
வகையென ஆடை வாங்கி
வறுமையை மறைத்து அந்த
செழுமையை கூட்டி நிற்கும்
ஆண்மையின் ஆவல் என்றும்
ஆனந்த அர்ப்பணிப்பு
பேரவா போங்க உள்ளம்
பூரிக்கும் வேளை தன்னில்
பூஜைக்கு மாலை செய்து
பொங்கலை படைக்கும் அந்த
சொந்தங்கள் உள்ள மட்டும்
சுகமான அர்ப்பணிப்பு
காதலை காட்டி எந்தன்
கனவினை ஊட்டி என்னில்
ஆவலை தூண்டும் போதும்
ஆசைக்கு வேலி இட்டு
இலக்கினை எட்ட செய்யும்
என்னவள் ஆவி எல்லாம்
எனக்கென அர்ப்பணிப்பு
பெற்றவர் மானம் காத்து
பேரவா பொங்கும் வண்ணம்
உற்றவர் பெருமை சொல்ல
உளமது மகிழும் போதில்
அன்னையின் மடியில்
ஓர் துளி என அர்ப்பணிப்பு
காலத்தின் கோலமதில்
கண்ணினை மூட முன்னம்
ஞாலத்தின் விருப்பின்
வண்ணம் பெற்றவர்
சேவை என்னும் தேவையை
பூர்த்தி செய்யும் பேறு கோள்
பிள்ளை என்றும்
தியாகத்தின் அர்ப்பணிப்பு
வாழ்ந்திடும் காலம் மட்டும்
வறுமையும் வந்து போகும்
தேகத்தில் உள்ள மட்டும்
திறமையும் அர்பணிப்பே
பிறப்பிலே தொடர்ந்த சொல்லே
இறப்பிலும் ஒட்டி வந்தால்
இயற்கையின் நியதி ஒன்றின்
விதிப்படி அர்பணிப்பே ……
– கவிப்புயல் சரண்.