தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான கொக்கச்சான் கிராமம் கலாபோபஸ்வெவ என பெயர்மாற்றம் செய்யப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இக்கிராமத்துடன் இணைத்தும், மகிந்த ராஜபக்ஷவின் மகனின் பெயரில் உருவாக்கப்பட்ட நமல்புர கிராமத்துக்கும் உறுதிகளை வழங்கி வைப்பதற்காக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று வவுனியாவுக்கு வருகைதரவுள்ளார்.
அத்துடன், வவுனியா சைவப்பிரகார மகளிர் வித்தியாலயத்தில் இன்று நடமாடும்சேவை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்று வவுனியாவுக்குப் பயணம் செய்யவுள்ளனர்.
இதன்போது சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்ட கலாபோபஸ்வெவ கிராமமம், நமல்புர கிராமம் உட்பட சிதம்பரபுர மக்களுக்கும் காணி உறுதியை வழங்கவுள்ளனர்.
கலாபோபஸ்வெவ சிங்களக் கிராமத்தில் 3500 மக்களுக்கு காணி உறுதி வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், சிதம்பரபுரத்தில் 206 குடும்பங்களுக்கு மாத்திரமே காணி உறுதி வழங்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு இனவிகிதாசாரம் குறைக்கப்பட்டதோ அவ்வாறு வடமாகாணத்தை மாற்றுவதற்கு முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்