அரசாங்கத்தின் முற்போக்கான செயற்றிட்டங்களுக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து உதவியாகவும், உறுதுணையாகவும் செயற்பட்டு வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று வவுனியாவில் நடைபெற்ற ஜனாதிபதியின் நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் முற்போக்கானசெயற்றிட்டங்களுக்கு நாங்கள் எதிர்க்கட்சி வரிசையிலிருந்து உதவியாகவும் உறுதுணையாகவும் செயற்படுவதுஅரசாங்கத்துக்கு மாத்திரமல்ல அனைவருக்குமே நன்கு தெரியும்.
வடமாகாணத்தில் வவுனியாமாவட்டம் முக்கியமானதொரு மாவட்டமாகும். இங்கு தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும் வாழ்கின்றனர்.
நாட்டில் இன ஐக்கியம் ஏற்படவேண்டும். தமிழ் மக்களின் அதிகளவான பங்களிப்புடனேயே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது.
இந்த அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அந்த வேலைத்திட்டத்திற்காக நாங்கள் எங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி வருகின்றோம்.
அது சரியான முறையில் நிறைவேறினால்தான், இத்தகைய வேலைத்திட்டத்தின் முழுப் பெறுமதியையும் நாங்கள் அடையக்கூடியதாக இருக்கும்.
இந்த நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த நாட்டிலே வாழுகின்ற அனைத்து மக்களும் சம பிரஜைகள் என்று வாழ்வதற்கான அத்த்திவாரமாகபோடப்படவேண்டிய புதிய அரசியலமைப்பு உருவாக்கந்தான் இந்த நாடு சுபீட்சம் அடைவதற்கும், ஒரு புதுப் பாதையில் பயணிப்பதற்கும் அத்திவாரமாக இருக்கும்.
அந்தப் பணியை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆரம்பித்திருக்கின்றனர். அப்பணி திறம்படத் தொடரவேண்டுமென வாழ்த்துகின்றேன் எனத் தெரிவித்தார்.