காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பம் அரசியலமைப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஜூலை மாதம் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன், வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இருப்பினும் காணாமல்போனோர் அலுவலகத்துக்கு பணியாளர்களை நியமிப்பதில் இழுபறி நிலை காணப்பட்டது.
இதனையடுத்து அரசாங்கத்துக்கெதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து அரசியலமைப்பு பேரவையினால் மும்மொழிப் பத்திரிகைகளிலும் இவ்விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இவ்விண்ணப்பங்கள் அனைத்தும் நவம்பர் மாதம் 6ஆம் நாளிற்கு முன்னர் அனுப்பிவைக்கப்படவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விண்ணப்பதாரிகள், உண்மை கண்டறிதல் அல்லது விசாரணைகள், மனித உரிமைகள் சட்டம், அனைத்துலக சட்டம், மனிதாபிமான செயற்பாடுகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும், அல்லது காணாமல் போனோர் பணியகத்தின் பணிகளை நிறைவேற்றுவதுடன் தொடர்புடைய வேறு தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.