யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மனிதரே இல்லையெனத் தெரிவித்த மேர்வின்சில்வா அவர் புத்தரைப் போன்று ஞானம்பெற்ற ஒருவர் எனப் புகழ்ந்துள்ளார்.
இந்து ஆலயங்களில் மிருகபலி இடுவதற்கு தடை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளஞ்செழியன் நேற்று முன்தினம் தீர்ப்பளித்திருந்தார்.
நீதிபதி இளஞ்செழியனின் இத்தீர்ப்புத் தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நீதிபதி இளஞ்செழியன் புத்த பெருமான் அளவுக்கு முக்தியடைந்தவரென தாம் நினைப்பதாக மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
மேலும் நீதிபதி இளஞ்செழியனின் இந்த தீர்ப்பை ஏனைய நீதிபதிகளும் முன்னுதாரணமாக பின்பற்ற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான தீர்ப்புக்களை அறிவிப்பதன் ஊடாக கிடைக்கும் நன்மையினால் சொர்க்கத்திற்கு இலகுவில் செல்லமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளும் இதுபோன்ற நல்ல விடயங்களை கண்டால் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் மேர்வின் சில்வா பரிந்துரை செய்துள்ளார்.
இதேவேளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னேஸ்வரம் காலிக் கோவிலில் மிருக பலி பூஜை இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது கோவிலுக்குள் அத்துமீறி பிரவேசித்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, பூஜைக்காக அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த கால்நடைகளை அவிழ்த்துவிட்டதோடு பூஜை செய்வதற்கு இடையூறும் ஏற்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.