வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடகாலம் இருக்கின்றது. ஆனால், இப்போதே அடுத்த முதலமைச்சருக்காக யாரை நியமிப்பது என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். எவரும் முதலமைச்சராகலாம். ஆனால், எவர் முதலமைச்சரானாலும், தற்போதுள்ள அரசியலமைப்பின் கீழ் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
உடுப்பிட்டி வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையத்தின் பவளவிழாவும் புதிய கட்டிடத்திறப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை (28.10.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒவ்வொரு மாகாணசபை உறுப்பினருக்கும் ஒவ்வொரு வருடமும் 60 இலட்சம் ரூபா குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக ஒதுக்கப்படுகிறது. இந்நிதியில் இருந்துதான் கட்டுமான உதவிகளைக் கேட்டுவரும் சனசமூக நிலையங்களுக்கும் வாழ்வாதாரம் கேட்டுவரும் பொதுமக்களுக்கும் உதவிகளைச் செய்து வருகிறோம். ஆனால், இந்தக் குறைந்தளவு நிதியில் உதவி கோருபவர்களின் தேவையை முழுமையாக எங்களால் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. அதுமாத்திரம் அல்ல, இந்தக் குறைந்தளவு தொகையைக்கூட நாங்கள் விரும்பியதுபோன்று எங்களால் வழங்க முடியாமல் உள்ளது.
எனக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஒரு மாணவிக்கு 15 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒரு துவிச்சக்கர வண்டியை வழங்கியிருந்தேன். அந்த மாணவியின் வறுமை நிலையை எடுத்துச் சொல்லி அவருக்கு உதவி செய்யுமாறு கிராமசேவையாளர் ஒருவர் எனக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த மாணவி நன்றாகப் படிக்கும் மாணவி என்று அதிபரின் பரிந்துரை இல்லாமல் நான் துவிச்சக்கரவண்டியை வழங்கியது தவறு என்று கணக்காய்வுக்குழு எங்களிடம் விளக்கம் கேட்டது, பாடசாலையில் வழங்கப்படும் மதிய உணவுதான் வறிய அந்த மாணவிக்கு ஒருநாளில் கிடைக்கக்கூடிய சத்துணவு. பாடசாலை சென்றால்தான் ஒருவேளை உணவுதன்னும் அந்த மாணவிக்குக் கிடைக்கும். அதனால்தான் நான் அந்த மாணவிக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கினேன்.
வடக்கு மாகாணசபையின் கையாலாகாத நிலையை விளக்குவதற்கு இந்த ஒரு உதாரணமே போதும். மத்திய அரசாங்கத்தின் சுற்றுநிருபத்துக்குச் சேவகம் செய்யும் ஊழியர்களாகவே முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் உள்ளோமே தவிர, சுயமாக நாம் எதனையும் செய்ய முடியாதவர்களாகவே உள்ளோம். எனினும் எங்கள் சக்திக்கு மீறிப் பல பணிகளை நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். இதனைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்தும் புரியாததுபோல் அரசியல் காரணங்களுக்காக வடக்கு மாகாணசபை வினைத்திறன் அற்றது என்ற குற்றச்சாட்டுளைப் பலர் முன்வைத்து வருகிறார்கள். வடக்கு மாகாணசபை சுயாதீனமாகத் தொழிற்டக்கூடியவாறு அதற்கான அதிகாரங்கள் வழங்கப்படாதவரை மாகாணசபையால் சிறப்பாக இயங்க முடியாது. முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லோரும் பெயரளவுக்குத்தான் என்பதுதான் யதார்த்தம் என்றும் தெரிவித்துள்ளார்.